மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையின் சிகிச்சைப்பிரிவுகள் மூடப்படவில்லை- நிர்வாகம் கருத்து

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எந்தவொரு சிகிச்சைப்பிரிவும் முடக்கப்படவோ மூடப்படவோ இல்லையென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சினி தெரிவித்தார்.

இன்று மாலை வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் எந்தவொரு ஊழியரும் தனிமைப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளும் எந்தவித இடையூறுகளும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் மினுவான் கொடையில் பாதிக்கப்ட்டவர்களுடன் முதல் நிலை தொடர்பாளராக இருந்த காரணத்தினால் சுகாதார அமைச்சின் நெறிமுறைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பீசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு  கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இவருடன் தொடர்புபட்ட எவருக்கும் எந்தவிதமான தொற்றும் ஏற்படவில்லையென்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொவிட் செயலணி தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் பொதுமக்கள் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப்பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்குவதில்லை.அது மத்திய அரசின் கீழ் இயங்குகின்றது.போதனா வைத்தியசாலை தொடர்பான தகவல்களோ,வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை தொடர்பான விபரங்களோ சுகாதார அமைச்சின் அனுமதியுடன் வைத்தியசாலையின் பணிப்பாளரினாலேயே வெளியிடமுடியும்.

நேற்று இவ்வைத்தியசாலையில் தாதியர் ஒருவக்கு ஏற்பட்ட கொரனா தொற்று தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு ஊடகச்செய்திகள் என்னால் வழங்கப்படவில்லை.அதற்கு வைத்தியசாலை பணிப்பாளரினால் பொறுப்புக்கூறமுடியாது.