மட்டக்களப்பில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அதில் இருவர் மரணம் அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் இனங்காணப்பட்ட   21பேரில், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்த 8பேரும் வெல்லாவெளி, ஓட்டமாவடி,செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா மூன்று பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

மரணித்த இருவரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்தவர்களாவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1209பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 13மரணங்கள் சம்பவித்துள்ளன” என்றார்.

மேலும் “சுகாதார அமைச்சு கூறியதன்படி கோவிட் 19 தொற்றாளர்களுக்காக 100கட்டில்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்படவேண்டும். ஆனால் தற்போது 400கட்டில்கள் மாத்திரமே தயார் நிலையில் உள்ளது. அதற்காக எமது அடுத்த திட்டமிடலாக இரண்டு பிரதேச வைத்தியசாலைகள் கோவிட் வைத்தியசாலைகளாக மாற்றப்படவுள்ளன. மேலும் இரண்டு ஆதார வைத்தியசாலைகளில் சில பிரிவுகள் கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது. அடுத்த ஒருமாதகாலத்திற்குள் கட்டில்களின் எண்ணிக்கையை 700ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்”  என மருத்துவர்  நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.