மங்கள என்ன செய்கின்றார்? தீவிரமாகக் கண்காணிக்கும் புலனாய்வு அமைப்புக்கள்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் நகர்வுகள் தொடர்பில் அரசாங்கமும், அரச சார்பு அமைப்புகளும் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய புள்ளிகளில் ஒருவராக மங்கள சமரவீர திகழ்ந்தார். சர்வதேச மட்டத்தில் அவருக்கு பாரியதொரு வலைப் பின்னல் இருக்கின்றது.

பௌத்த தேரர்கள் சிலரின் செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்ததாலும், அவர் பௌத்த மதத்துக்கு எதிரானவர் என்ற தொனியில் மொட்டு கட்சியினர் பரப்புரைகளை முன்னெடுத்ததாலும் பௌத்தர்கள் மத்தியில் மங்களவுக்கான செல்வாக்கு சரிந்துள்ளது. பாராளுமன்ற அரசியலுக்கு மங்கள விடை கொடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனாலும் சர்வதேச மட்டத்தில் மங்களவுக்கான செல்வாக்கு குறையவே இல்லை.

அவரை ஜனநாயகப் போராளியாகவே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பார்க்கின்றனர். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். முக்கிய பதவிகளுக்கு இராஜதந்திரதுறையில் தேர்ச்சிபெற்றவர்களை நியமித்து வருகின்றார். சமந்தா பவர் உட்பட இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பலர் முக்கிய பதவிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி ஆட்சியானது, கொழும்புக்கு தலையிடியையும், நெருக்கடியையும் கொடுக்கும் ஆட்சியாகும். ஜெனிவாவில் பிரேரணைகள் நிறைவேறுவதற்குகூட ஜனநாயக கட்சியின் ஆட்சியே காரணமாக அமைந்தது. மங்களவுக்கு நெருக்கமான பலர் ஜனநாயகக் கட்சியில் இருக்கின்றனர். மறுபுறத்தில் மங்கள பலமானதொரு சிவில் அமைப்பை உருவாக்கி வருகின்றார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மங்களவின் நகர்வுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.