மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்- செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.