மகாவலி அபிவிருத்தி நில ஆக்கிரமிப்பை எதிர்த்து முல்லைத்தீவில் பேரணி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (28.08) காலை 10 மணியளவில் ஒன்றுகூடி ஆரம்பித்த கவனயீர்ப்புப் வேரணி முல்லைத்தீவு நகர் வழியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பேரணியை மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு மாவட்ட செயலக வாயில் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டது. குறித்த பகுதியில் பொலிசாரும் வரவழைக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பான மகஜரை கையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை குறித்த இடத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் குறித்த பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.

போராட்டத்தின் போது எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும். எமது மண்ணை ஆக்கிரமிப்பதை நிறுத்து. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பை நிறுத்து, அரசே எமது பூர்வீக நிலத்தை எமக்குத் தா. இலங்கை அரசே எமது மண்ணில் மகாவலியை நிறுத்து. உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும், வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும். எமது கடல் வளம் நமக்கு வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறும் சுமார் 300 மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

mahawali3 மகாவலி அபிவிருத்தி நில ஆக்கிரமிப்பை எதிர்த்து முல்லைத்தீவில் பேரணிதமிழர் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இந்த மகாவலி அபிவிருத்தி என்னும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது 1977ஆம் ஆண்டு காமினி திஸநாயக்க மகாவலி அமைச்சராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் 30 வருட காலத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. ஆனால் காமினி திஸநாயக்கவோ 6 ஆண்டுகளிலேயே இதனை முடித்திருந்தார்.

அவரின் பின்னர் வந்த எந்த அரசாங்கம் என்றாலும் இந்த மகாவலி அபிவிருத்தி என்ற பிரகடனத்தை மறக்கவில்லை.

அன்று முதல் இன்று வரை இந்த திட்டத்தின் மூலம் தமிழர் தாயகப் பகுதிகள் அபகரிக்கப்படுகின்றன. முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலேயே இந்த ஆக்கிரமிப்பு  அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த எல்லையோரக் கிராமங்களின் எல்லைப் பகுதியில் சிங்கள மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தையும் முழுமையாக சிங்களவர்களின் பிரதேசமாக மாற்றும் முயற்சியிலேயே சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இதை தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள் தட்டிக்கேட்டு தீர்வு எடுக்கா விட்டால், இன்னும் சில ஆண்டுகளில் முல்லைத்தீவு சிங்கள மாவட்டமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.