போலியான வேட்பாளர்கள் – நெருக்கடியில் சிறீலங்கா தேர்தல் திணைக்களம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பிரதானமான இரு கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் ஏழுபேர் ஒரு வேட்பாளருக்கும், மற்றைய ஆறுபேர் அடுத்த வேட்பாளருக்காகவும் களமிறங்கியுள்ளனர்.

இந்த வேட்பாளர்கள் குறித்த அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதுடன், இந்தக் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் பேரணிகளில் குறித்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியும் உள்ளனர்.

இந்த முறை தேர்தலில் 35 பேர் போட்டியிடுவதாகவும், இதனால் வாக்குச் சீட்டு நீளமானதாக உள்ளதாகவும், இதற்காகவே வாக்குப் பெட்டிகளை பெரியதாக வடிவமைத்துள்ளதாகவும் இது தேர்தல் திணைக்களத்தின் வேலையை அதிகப்படுத்தியுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.