போர்க்குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும்-ராமதாஸ்  

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயாவை தயாராக இருக்க வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று(21) அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில்,

“இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கின்றது.

இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்துள்ள கோத்தபயா ராஜபக்ஸ, ஈழத் தமிழர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதாவது அறிவிப்புகளை வெளியிடுவார் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கின்றது. ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபயா, தமது அரசு நிர்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத் தமிழர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைவராக இருந்த கமால் குணரத்ன என்ற தளபதி, ஈழத் தமிழர்களை கொடூரமான முறையில் கும்பல், கும்பலாக படுகொலை செய்தார். இறுதிப் போரில் சரணடைந்த தமிழர்களைக்கூட கொடூரமாக கொலை செய்த குணரத்ன, ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அத்தகைய போர்க் குற்றவாளியைத் தான், ஏற்கனவே தாம் அனுபவித்து வந்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் பதவியில் கோத்தபயா அமர்த்தியிருக்கின்றார். அது மட்டுமின்றி, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலக வைத்த கோத்தபயா, அந்தப் பதவியில் தனது சகோதரரும், இலங்கை இறுதிப் போரின் போது அதிபராக இருந்தவருமான மகிந்த ராஜபக்ஸவை அமர்த்தியிருக்கின்றார்.

இலங்கை அரசு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற நான்கு பதவிகள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர், போர்ப்படைத் தளபதி ஆகியவை தான். இவற்றில் முதல் 3 பதவிகளிலும் போர்க் குற்றவாளிகள் தான் அமர்த்தப்பட்டுள்ளனர். போர்ப்படைத் தளபதியாக இலங்கைப் போரில் முக்கிய பங்காற்றிய தளபதி ஒருவரை அமர்த்த கோத்தபயா முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது. இலங்கையின் 4 முக்கிய பதவிகளிலும் போர்க் குற்றவாளிகள் அமர்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகின்றது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஐ.நா. போர்க் குற்ற விசாரணை முடக்கப்படும் என்று கோத்தபயா ராஜபக்ஸ கூறிவந்தார். அவரது ஆட்சியில் போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமன்றி, இனி இலங்கையில் ஈழத் தமிழர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதுடன், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் கடமையும் இந்திய அரசிற்கு உண்டு. தெற்காசியாவின் வல்லரசு என்பது மட்டுமன்றி, ஈழத் தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையிலும் இதை இந்தியா செய்ய வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இத்தகைய சூழலில் தான் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு தான் வரவேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகவும், அத ஏற்று அவர் இம்மாதம் 29ஆம் திகதி இந்தியா வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபயாவை அவசரம், அவசரமாக டில்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதன் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ராஜபக்ஸ சகோதரர்கள் சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அவர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது, இநதியாவை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பது தான் அவரை அழைப்பதன் நோக்கம் என்பதை அறிய முடிகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த கோணத்தில் இதன் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் இலங்கையை சீனாவிடமிருந்து ஈர்ப்பதற்கான விலையாக ஈழத் தமிழர்கள் நலனைக் காவு கொடுத்துவிடக் கூடாது. ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், போர்ப்படை தளபதிகளும் தண்டனையின்றி தப்பிப்பதை இந்தியா அனுமதிக்கக்கூடாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களுடன் கோத்தபயா பேச்சு நடத்தும் போது, போர்க் குற்ற விசாரணை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு அறித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும். போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும்.

அது மட்டுமன்றி, ஈழத் தமிழர்களுக்கு 18ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு கூடுதலாகவும் வழங்கப்பட  வேண்டிய அரசியல் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் வெளியேற்றப்பட வேண்டும், தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும் கோத்தபயா ராஜபக்ஸவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் என்றும் கோருகின்றேன்.“ இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.