போர்க்களங்களைப் பூஞ்சோலைகளாக மாற்றுவோம்- கவிதா ஆல்பர்ட்

மேகங்களால் சூழ்ந்த வானம் சோகங்களால் சூழ்ந்த மேகங்களால் அழுவது போல், வளங்களைச் சுமந்து வளமாக இருந்த பூமி, ஆயுத அபாயங்களால் நிறைந்து வருவதால், எரிமலைகளாக குமுறி அழுகிறது. மனிதர்களின் உணர்ச்சி மொழிகளையே அறியாத மானுடர்களால் இயற்கையின் அழுகுரலை அறிந்து கொள்ளவா முடியும்?

தாவரங்கள் இயற்கைக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளால் குமுறி அழுவதை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களை அழவைத்து இரசித்துக் கொண்டிருக்கும் நாம், இப்போது இயற்கையையும் அழவைத்து இரசிக்க ஆரம்பித்துவிட்டோம். உலகம் முழுவதும் உண்ண உணவின்றி மடிந்துவருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகள் மக்களின் உணவுத் தேவைகளில் கவனம் செலுத்தாமல் அழிக்கும் ஆயுதக் குவியல்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றன.

இன்று வர்த்தகங்களிலெல்லாம் அதிக விசனம் தருகின்ற வர்த்தகமாக அணு ஆயுத வர்த்தகம் தான் இருக்கிறது. அதற்குத் தான் நாடுகளும் அரசுகளும் முக்கியத்துவம் வழங்குகின்றன. நாடுகளோடு நாங்கள் ஏன் போரிட வேண்டும்? நாடுகளையும் மக்களையும் சிதறடித்து அழிக்கும் கொடுமையை ஏன் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி ஒவ்வொரு இளையவர் உள்ளத்திலும் உருவாக வேண்டும். இனிவரும் தலைமுறையாவது போர்களில்லாத ஓர் உலகைப் படைக்க முன்வரவேண்டும்.

கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் பெறுவதிலும், தரமான கல்வி என்ற பெயரில் வெளிநாட்டு மோகத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. உயர் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணுவதும் தவறில்லை. ஆனால் அதுமட்டும் தான் நோக்கமாக இருக்குமாயின் அந்த இலக்கு தவறானது.

காரணம் பூமி வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத வெப்பம்  உலகத்தையே வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. “சோலைவனங்கள் எல்லாம் பாலைவனங்கள் ஆகும். பாலைவனங்கள் சோலைவனங்கள் ஆகும்” என்கிற திருவிவிலியத்தின் வார்த்தைகளின்படி முடிவு நாளை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியும் எண்ணமும் மனிதர்களின் உள்ளங்களில் எழத்தொடங்கிவிட்டது.

இன்று போட்டி போட்டுக்கொண்டு உலக நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. யார் பெரியவன்? என்கிற போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்னும் நோக்கில் ஒவ்வொரு நாடும் விதம்விதமான அணுவாயுத சோதனைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன.

இளையோர் பலர் இனங்காண முடியாத காரணங்களால் அதிர்ச்சிகரமான அதிரடி மரணங்களைத் தழுவிக்கொண்டிருக்கின்றனர். எதைப்பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. நாமும் நமது குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்று ஒருசிலர், பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யத் துணியும் இளையோர், நாட்டுப்பற்று என்று சொல்லி போரில் ஈடுபடுத்தப்பட்டுப் பலியாக்கப்பட்டு வரும் இளையோர் என்று இன்று இளையோரின் ஆற்றல் முழுவதும் அறிவு என்ற பார்வையில் (போர்வையில்) பயனற்ற முறையில் உலகினரால் வீணடிக்கப்பட்டு வருகிறது.

வழிகாட்டிகள் சிறப்பாக இருந்தால் தான் அவர்களைத் தொடர்ந்து பயணம் செய்வோர் பாதுகாப்பான முறையில் சிறப்பாகப் பயணம் செய்ய முடியும். எம் இளையோரின் எதிர்காலம் இராணுவ முகாம்களிலும், போர்க்களங்களிலும் ஆயுத உருவாக்கங்களிலும் அவர்கள் ஆற்றல் வீணடிக்கப்பட்டு, அழிக்கப்படுவது கண்டு இதயம் வலிக்கிறது.

முதிர்ச்சியற்ற முதியவர்களின் கரங்களில் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலைக் கொடுத்துவிட்டு, அப்பாவி இளையோர் அடிமைகளாக அல்லல்படும் நிலை உலகம் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காணும் எம் அன்பு இளையோரே, விழுந்து கிடக்கும் மாயக் கவர்ச்சிகளிலிருந்து மாற்றம் பெற்று மகத்தான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் உங்களை நீங்கள் எப்படி உருமாற்றிக்கொள்ளப்போகிறீர்கள்?

அரசுகளை மீட்டெடுத்தால் தான் அதிகார மமதையிலிருக்கும் அரக்கர்களிடமிருந்து அப்பாவி மக்களை மீட்டெடுக்க முடியும். பண்பட்ட உள்ளமும் உயர்ந்த இலட்சியமும் சிறந்த பார்வையும் சீரிய செயல்திறனும் கொண்ட இளையோர் ஒன்றிணைய வேண்டும். அரசியலில் நீங்கள் ஆழமாக வேரூன்ற வேண்டும். நமக்கேன் என்று நாம் சிந்தித்தோமானால் நமக்கும் நமது சந்ததிக்கும் இந்த உலகில் ஓர் அமைதியான பண்பட்ட சிறப்புமிக்க வாழ்வு இங்கு சாத்தியமாகாது.

நாம் உணர்வுமிக்கவர்கள், செயற்கரிய சிந்தனைத்திறன் உடையவர்கள். தொங்கிக்கொண்டிருக்கும் பந்து போன்ற அமைப்பில் உள்ள உலகைப் பக்குவமாகக் கையாள்வோமானால் அதுவும் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். மாறாக ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், பூமியை அதிரவைத்துக் கொண்டிருக்கும் ஆயுதப்பூக்களால் தொடர்ந்து  பூமியை  அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறோம்.  நாடுகளோடு நாடுகள் போரிடும் நிலைக்குச் செல்ல வேண்டாம். இப்படி பூமித்தாய்க்கு அழுத்தம் கொடுத்துத் துன்புறுத்துவோமானால்,  பூமித்தாய் அழுத்தம் தாங்காமல் அலறி அழுவாள். ஓங்கும் எரிமலைகளும் பூகம்பங்களும் சுனாமிகளும் தோன்றி உலகம் அழிவைக் காண்பது உறுதி.

எனவே அன்பு இளையோரே, கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு என்ற பாரதியின் வரிகளை எண்ணத்தில் கொண்டு உலகைக் காக்கும் சிந்தனையோடு, உலகில் போரலைகளாகத் தோன்றிக்கொண்டிருக்கும் பேரலைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகும் நபர்களில் நீங்களும் ஒருவராக இலலாமல் உங்கள் அறிவை, ஆற்றலை ஊக்கமாகக்கொண்டு, புதியதோர் உலகைச் செய்யும் புதிய எண்ணங்களை உருவாக்கத் திட்டமிடுவோம். போரிடும் கெட்ட உலகை வேரோடு சாய்த்து, ஒவ்வொரு தனிமனிதனும் அச்சமின்றி அமைதியுடன் மனநிறைவுடன் இன்பமாக வாழ வழிசமைப்போம். “ஐந்து இளைஞர்களை எனக்குத் தாருங்கள். இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்” என்ற  சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை மனதில் கொண்டு வென்று காட்டுவோம்.

தொடரும்