p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான்

வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தினை இராஜதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்ததனர். இதனையடுத்து வடகிழக்கில் செயற்பட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போதைய காலத்தில் வடகிழக்கில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும், அதேபோன்று தமிழ் மக்களின் உரிமைக்காகக் களத்தில் இறங்கிப் போராடுவோரை மிரட்டும் பணிகள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் குரல்வளையினை நசுக்கும் வகையிலான செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினைத் தொடர்ந்து செயற்பாட்டாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் மிகவும் கடுமையான அழுத்தங்களை முன்னெடுத்து வருகின்றது.

யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் தமது நியாயத்தினைப் பலமாக எடுத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாத நிலையில், அனைத்துத் தடைகளையும் தாண்டி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியது. இந்நிலையில், அது இலங்கை அரசாங்கத்தினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அதன் காரணமாக இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஏழுச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், குறித்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என பலதரப்பட்டவர்களையும் புலி முத்திரை குத்தி விசாரணையென்ற போர்வையில் அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்கிய ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பு தலைவியும், இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி நிர்வாக உறுப்பினருமான கந்தையா கலைவாணி என்பவரிடமும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Capture.JPG 1 3 p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது - மட்டு.நகரான்

இந்த விசாரணைகளின்போது பொதுவாக விடுதலைப்புலிகளுடனான தொடர்புகள், புலம்பெயர் தமிழர்களுடனான உறவுகள் என ஒரு வட்டத்திற்குள் நின்று இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரைக்கும் கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரைக்கும் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்கியவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள், அந்தப் பேரணிக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கியவர்கள் என பல்வேறு தரப்பினரும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தமிழ் மக்களின் உரிமை சார்ந்து செயற்படுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படும் நிலையில் பயங்கரவாத தடுப்பு ஊடாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அச்சுறுத்தல்களையும், பயமுறுத்தல்களையும் செய்து, தமிழ் மக்கள் மீதான ஜனநாயக மீறல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் குரல்வளையினை நசுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஒரு சமூகத்தின் மீதான அழுத்தங்களையும், அடாவடித்தனங்களையும் மேற்கொள்வதன் மூலம் அவர்களின் குரல்வளைகளை நசுக்கலாம் என்று சிங்கள அரசு நினைப்பதானது, எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரிய ஆபத்தாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் குரல் எழும்பிவிடக் கூடாது என்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை சிங்கள அரசுகள் தனது படை பலத்தினைக் கொண்டு முன்னெடுத்து வருகின்றது.

மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிவில் திணைக்களங்கள் ஊடாகவும் அச்சுறுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தப்பட்டு, அவர்கள் செயற்படாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று கிழக்கு மக்களின் குரல்வளையினை நசுக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள், முன்னாள் ஆயுதக் குழுக்களின் உதவிகள், ஒத்தாசைகள் பெருமளவில் வழங்கப்படுகின்றன அல்லது பெறப்படுகின்றன.

Capture.JPG 2 p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது - மட்டு.நகரான்

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் குரல் எவ்வாறு வெளிக் கொணரப்படவுள்ளது என்பது மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. இன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படும்போது தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் கண்டும் காணாத வகையிலேயே செயற்படுகின்றன.

இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சரியான அழுத்தங்கள் பிரயோகிப்பதன் மூலமே எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தங்களது பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் சூழ்நிலையுருவாகும். இதனை அனைவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.