பொதுத் தேர்தல் ஆசனப்பங்கீடு: கூட்டமைப்பின் பங்காளிகளிடையே இணக்கம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டியிடுவது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனப்பங்கீடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தி தரும் விதத்தில் இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது.

நேற்று மாலை கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இறுதி இணக்க நிலை எட்டப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும் தேர்தல் மாவட்ட ரீதியாக ஆசனப் பங்கீட்டு விவரத்தை அவர் வெளியிடவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தி தரத் தக்க வகையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதை மட்டுமே இப்போதைக்கு மக்களுக்குத் தெரிவிப்பது எனக் கூட்டத்தில் முடிவுசெய்துள்ளோம். ஆசன ஒதுக்கீட்டு விவரத்தை உரிய காலத்தில் அறிவிப்போம். இப்போதைய நிலையில் எந்த முரண்பாடுகளும் இல்லாமல் – எல்லோருக்கும் திருப்தி தரும் விதத்தில் – பங்கீடு முழு இணக்கமாக முடிவடைந்துள்ளது என்பதை மட்டும் கூறமுடியும் – என்றார் அவர்.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறீதரன் மற்றும் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி, ஆர்.இராகவன்(ஆர்.ஆர்.) ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சுரேந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

ஆசனப் பங்கீடு இதுதான்:- யாழ்ப்பாணம் மாவட்டம் -தமிழரசு – 7; புளொட் – 02; ரெலொ – 01.

வன்னிமாவட்டம் – தமிழரசு – 04; ரெலோ – 03; புளொட் -02.

மட்டக்களப்பு மாவட்டம் – தமிழரசு – 05; ரெலோ – 02; புளொட் – 01.

திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களில் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களைப் பொறுத்துக் கேட்கும் இடங்களை அளிப்பது என்று தீர்மானிக்கப் பட்டது. கொழும்பிலும், கம்பஹாவிலும் போட்டியிடுவது என்றும், கொழும்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் உட்பட 22பேர் கொண்ட அணியைத் தெரிவுசெய்வதற்கான உபாயங்களை ஆராய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.