பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது கவலையளிக்கிறது –  உச்சநீதிமன்றம்

பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் இந்தப் பரிந்துரை (பேரறிவாளனின் கருணை மனு) 2 ஆண்டுகளாக ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது,” என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் வழங்கியது. ஆளுநரின் முடிவை அடுத்து 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே சமயம், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எழுவரின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பேரறிவாளன் கருணை மனு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது  “பல்துறை கண்காணிப்பு நிறுவனத்தின் (எம்டிஎம்ஏ)  இறுதி அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எம்டிஎம்ஏ இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது,” என்று  கூறியுள்ளது.

“அவ்வாறு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தால், எம்டிஎம்ஏ குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் தந்து தெளிவுபடுத்தினீர்களா?” எனத் தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை வருகிற 23ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 1991-ல் பேரறிவாளனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

அவர்  20 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.