புலம் பெயர்ந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுமந்திரன் இங்கிலாந்து சென்றார்

சஜித் பிரேமதாசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார். அதற்கமைவாக சுமந்திரன் இங்கிலாந்து சென்று புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை வெற்றிபெறச் செய்வதற்காக பாரிய அரசியல் சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டங்கள் அனைத்தும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்திலேயே தீட்டப்படுவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்ததுடன், இதன் ஒரு அங்கமாகவே சஜித் தலைமையிலான ஆட்சியில் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்படாது என்ற பரப்புரை என்றும் கூறியுள்ளார்.

நவம்பர் முதலாம் திகதியில் இருந்து நவம்பர் 14ஆம் திகதி வரை மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் மங்களவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர். ஆறு காரணங்களை முன்னிறுத்தி அவர்கள் 14 நாட்களுக்குள் ஏதாவது மாற்றம் ஒன்றை கொண்டு வரும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளனர்.

முதலாவதாக ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கின்றனர். அதாவது பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்கப் போவது இல்லையென தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவிப்பு ஒன்றை விடுக்க சஜித் திட்டமிட்டுள்ளார். அதாவது ரணில் பிரதமராக பதவி வகிப்பார். எனினும் தன்னுடைய ஆட்சியில் பிரதமராக ரணில் இருக்க மாட்டார் என்ற ரீதியில் சஜித் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் யாரென முழு நாட்டிற்கும் தெரியும்.

கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் வந்து இணைந்து கொள்ளப் போகின்றார்கள். அதனை நாமும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். நாளை அல்லது நாளை மறுதினங்களில் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அவர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரசாரங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணக்கெடுப்புக்களிலும் கோத்தபயா ராஜபக்ஸவே முன்னிலை வகிக்கின்றார்.

யார் என்ன சொன்னாலும் தமிழ் மக்கள் சார்பில் 13 நிபந்தனைகளை முன்வைத்து பேரம் பேசி வருவதாக நாடகம் ஆடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை பெற்றுக் கொடுக்கும் என்று மகிந்தானந்த அளுத்கமகே எதிர்வு கூறினார்.

கஜித் பிரேமதாசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார். அதற்கமைய சுமந்திரன் இங்கிலாந்து சென்று புலம் பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.