புதிய அரசியலமைப்பு என்ற சூழ்ச்சியில் தமிழ்க் கட்சிகள் சிக்கிவிடக்கூடாது : தயான் ஜயதிலக்க

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் மீளெழுச்சி அடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் கூட்டிணைந்து கோரவேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று நாட்டில் தேசிய பிரச்சினையொன்று இல்லையென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பயணிக்கின்றார்.
இந்த நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக அவர் கூறும் சூழ்ச்சிக்குள் எழுச்சிபெற்றுள்ள தமிழ்க் கட்சிகள் சிக்கிவிடக்கூடாது என்றும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

2024இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னரான பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன.
ஆனால் கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை வட, கிழக்கு மக்கள் தூக்கி எறியச் செய்து தமிழ்க் கட்சிகள் வாக்கு வங்கி ரீதியாகவும் மக்களின் ஆதரவுத் தளத்திலும் மீளெழுச்சி அடைந்திருக்கின்றன.

மிகக்குறுகிய காலத்தில் தமிழ்க் கட்சிகளின் மீளெழுச்சியானது ஜனநாயகத் தளத்தில் அரியதொரு சாதனையாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று அரசியல் ஆய்வாளரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான சீர்திருத்தவாத தீர்வினை முன்வைப்பதற்கு பதிலாக, போலியான மார்க்சிய வாதத்தினை மீளப்புதுப்பிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளார். எனவே, அதிகாரப்பகிர்வின் ஆரம்பமாக இருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான கலக்கெடுவை அறிவிக்காது காலம் தாழ்த்துகின்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அரசியல் ஆய்வாளரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.