புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு ‘பிரேத பரிசோதனை’ – பூமிகன்

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் முற்பட்ட அதற்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது புதிய அரசியலமைப்பு மீதான ஒரு பிரேத பரிசோதனையாகவே இருந்தது. இதனைக் கொன்றது யார்? அதற்கு எவ்வாறு சமாதி கட்டப்பட்டது என்பதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக வாதிட்டுள்ளார்கள்.

“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததில் தெளிவான செய்தி ஒன்று பொதிந்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இடம்பெற்று, குற்றுயிராக – கோமா நிலையில் கிடந்த புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது என்பதுதான் அது. இன்னும் நான்கு மாதங்களில் சனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அது முடிந்து சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும். ஆக, இதற்கு முன்னதாக அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிளுக்குப் புத்துயிர் கொடுக்க முடியாது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் தீர்வு என பிரதமர் கூறியிருப்பது ஒரு புறம் அடுத்த தேர்தலை இலக்கு வைத்த வாக்குறுதியாக இருந்தாலும், மறுபுறத்தில் தற்போதைய அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மறைமுகமாக அறிவிப்பதாகவும் அமைந்திருந்தது.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவுக்கு ரணில்தான் தலைமை தாங்கினார். அதற்கான செயலகத்துக்குப் பொறுப்பாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவும், சுமந்திரனும் இருந்தார்கள். ஆக, அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது என்பது இவர்களுக்குப் புரியாமலிருக்காது.TH24WORLDSRILANKAPOLITICS புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு 'பிரேத பரிசோதனை' - பூமிகன்

பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்ட பின்னணியில், “புதிய அரசியலமைப்புக்கு என்னதான் நடந்தது?” என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதம் ஒன்றும் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த விஷேட கவனயீர்ப்புப் பிரேரணையையடுத்து வியாழன் வெள்ளி என இரண்டு நாட்களுக்கு இந்த விவாதம் இடம்பெற்றது. இந்தப் பிரேரணையின் மூலம் அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கே கூட்டமைப்பு முயன்றதாகத் தெரிகின்றது. ஏனெனில் கூட்டமைப்புக்கு அது தேவையாக இருந்தது.

அடுத்தமாதம் புதுடில்லி செல்வதற்கு கூட்டமைப்பு திட்டமிடுகின்றது. அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகள் ஒன்றுமே இல்லை – தேர்தல் தயாரிப்புக்கள்தான் நடைபெறுகின்றது என்றால், அங்கு சென்று பேசுவதற்கு எதுவுமே கூட்டமைப்புக்கு இருக்காது. அதனைவிட, புதிய அரசியலமைப்பில்தான் கூட்டமைப்பு தனது அரசியல் முதலீடுகளைச் செய்திருக்கின்றது. அதற்குச் சமாதி கட்டப்பட்டுவிட்டது என்றால், தேர்தலுக்கு முகங்கொடுக்கும் போது மக்களை எதிர்கொள்ள கூட்டமைப்பிடம் எதுவும் இருக்கப்போவதில்லை. அதனால்தான் இந்த விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தாலும், அரசியலமைப்பு குறித்த ஒரு பிரேத பரிசோதனைதான் இரண்டு நாட்களாகப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது எனச் சொல்லலாம். கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் இங்கு அவர்கள் காராசாரமாக நிகழ்த்திய உரைகள், மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவுத் தளத்தைத் தக்க வைப்பதற்குப் போதுமானது என அவர்கள் நம்பலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில், அதனை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. கடந்த மாதம் கூட ரணிலைப் பாதுகாத்தவர்கள் இப்போது வீராவேசமாகப் பேசுவதை நம்புவது எப்படி என்பதுதான் அவர்களுடைய கேள்வி!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழமைபோல ஆக்ரோஷமாக ஒன்றரை மணிநேரம் பேசினார். “புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் அதிகார பரவலாக்கம் குறித்தும் அரசாங்கம் உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு நம்பிக்கையற்றதொன்றாகிவிடும். புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகளை எடுத்துக்கொண்டு பிளவுபடாத நாட்டுக்குள் முறையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும்.  இல்லாவிட்டால் இந்த அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க முடியாதநிலை ஏற்படும்” என்பது சம்பந்தனின் எச்சரிக்கை. சம்பந்தன் இவ்வாறு எச்சரிப்பதும் பின்னர் ரணிலுடன் பேரம் பேசி ஆதரவளிப்பதும் வழமையானது என்பதால் அதனையாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.Sambandan புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு 'பிரேத பரிசோதனை' - பூமிகன்

அரசாங்கம் தனது பயணத்தின் இறுதிக்கு வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் மாற்றங்கள் வரப்போகின்றது. அரசியலமைப்பை உருவாக்கும் பணியின் ஆரம்பத்தில் சொல்லியிருக்க வேண்டியதை இறுதிக் காலத்தில் சொல்வதன் மூலம் சம்பந்தனால் எதனையும் சாதிக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

அரசியலமைப்பு பணி ஆரம்பமாவதற்கு முன்னரே, அதாவது 2015 இலேயே, “அடுத்த வருடத்தில் தீர்வு” என நம்பிக்கை வெளியிட்டவர் சம்பந்தன். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளைச் செய்வது, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலீடாகாது. புதிய அரசமைப்பைக் கொண்டுவராவிட்டால் நாடு இதுவரை சந்தித்திராத பேரழிவை எதிர்கொள்ளும். 70 ஆண்டுகளாக நாங்கள் தீர்வைப் பெற முயல்கிறோம். எங்களால் இயன்ற முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். எங்களுக்கு தேவை என்றபடியால் தான் நாங்கள் உச்சபட்ச ஒத்துழைப்பு மற்றும் விட்டுக்கொடுப்பை வழங்கியுள்ளோம். பிரதமரும் அரசும் தங்களின் பொறுப்பில் இருந்து நழுவி விட முடியாது” எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும் என்பதற்கு இலங்கையின் வரலாற்றில் 70 ஆண்டு கால அனுபவம் உள்ளது. எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளையே கிழித்தெறியும் அரசாங்கங்களை நாம் கண்டுவந்திருக்கின்றோம். தந்தை செல்வாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு தடவைகள் மீறப்பட்டன. மூன்று சந்தர்ப்பங்களில் மட்டும்தான் அதிகபட்சமான தீர்வுக்கு இலங்கையின் அரசாங்கங்கள் இறங்கிவந்திருந்தன.

ஒன்று – இந்தியாவின் அழுத்தத்தால் உருவான 13 ஆவது திருத்தம். இரண்டு – உள்ளக சுயாட்சிக்கு இணங்கிய ஒஸ்லோ உடன்படிக்கை, மூன்று சந்திரிகா தயாரித்த பிராந்தியங்களின் ஒன்றியம். இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் விடுதலைப் புலிகளின் பலம் அரசாங்கத்தை பணியவைத்தது. 87 இல் இந்தியாவின் தலையீடு 13 ஆவது திருத்தத்துக்கு காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அதாவது ஆயுத பலம் அல்லது, வெளிநாட்டு அழுத்தம்தான் அரசாங்கத்தைப் பணியவைக்கும். இல்லையெனில் பேரினவாத நிலைப்பாட்டில்தான் அரசு செல்லும். சிறீலங்கா அரசாங்கம் என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட பௌத்த –

சிங்கள கடும்போக்கால் நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒன்று. 2015 தேர்தலின் போது சம்பந்தனுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக சனாதிபதியும், பிரதமரும் புதிய அரசியலமைப்பைக்கொண்டுவந்து இன நெருக்கடிக்குத் தீர்வைத் தருவார்கள் என யாராவது நம்பியிருந்தால் அவர்கள் வரலாற்றைப் படிக்காதவர்களாக இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டபோதே, அதன் முகவுரையில் அதிகாரப்பரவலாக்கல் என்ற பதம் நீக்கப்பட்டது. அப்போதே இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது வெளிப்படையாகியது. அப்போதே உசாரடைந்து அதற்கேற்ற உபாயங்களை கூட்டமைப்புத் தலைமை வகுத்திருக்க வேண்டும்.

கல்முனை விவகாரத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு கொடுத்த வாக்குறுதியைக்கூட அரசாங்கம் காப்பாற்றவில்லை. ஆனால், கூட்டமைப்பின் வாக்குகளால் அரசு நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து தப்பியது. அந்த ஒரு சிறிய பிரச்சினைக்கே தீர்வு கிடைக்கவில்லை. கன்னியா, செம்மலை விவகாரங்கள் நீதிமன்றத்துக்குச் செல்கின்றன. இவற்றுக்குக் கூட அரசியல் ரீதியிலான தீர்வு இல்லை. இந்த நிலையில், இனநெருக்கடிக்கு அரசாங்கம் நியாயமான தீர்வைத் தரும் என கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றதா? கூட்டமைப்புக் கோரிய விவாதத்துக்குப் பதிலளிக்கக்கூட பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் யாரும் சபையில் இருக்கவில்லை. சம்பந்தன் பேசிய போது சபையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தார்கள்.

அரசியலமைப்பு குறித்த இந்த விவாதம் – அல்லது பிரேத பரிசோதனை இரண்டு விடயங்களைத் தெளிவாக்கியிருக்கின்றது. ஒன்று – சிங்களக் கட்சிகள் எவற்றுக்குமே இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. இரண்டு – அதனைத் தெரிந்து கொண்டும் பாராளுமன்ற ஆக்ரோச உரைகளின் மூலம் இழந்து போன தமது ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பவும், தமது தவறுகளுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் தலையில் போட்டுவிடுவதற்கும் கூட்டமைப்பு முயன்றுள்ளது.