பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகைத் தரக் கூடாது- விவசாயிகள் கோரிக்கை

குடியரசு தின விழாவிற்கு வருகை புரிவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் விவாசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்ய கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,விவசாய சட்டங்களை மத்திய அரசு இரத்து செய்யும் வரை, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழாவிற்காக இந்தியா வருவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் முறையிடுமாறு பிரிட்டன் பஞ்சாபி தலைவர்களிடம், விவசாயிகள் சங்க தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் சிங்கு எல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஹரேந்தர் சிங் லகோவால், “விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று பிரிட்டன் பிரதமரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இப்போது இங்கிலாந்து அரசியலில் இருக்கும் பஞ்சாப் தலைவர்கள் வழியாகவும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகளாக உள்ள பஞ்சாப் தலைவர்கள் வழியாகவும் நாங்கள் முறையீடு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம், வருகை தந்த பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினின் ராப், ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்பார் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.