பாதுகாப்பு அமைச்சுப் பதவியை கோட்டா வைத்து இருப்பது சரியா? – ஒரு அரசியலமைப்பு சர்ச்சை

இலங்கை அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வைத்து இருக்க முடியாது என்று பிபிசி சிங்கள சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிபிசி சிங்கள சேவை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

19 ஆவது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்க ஜனாதிபதிக்கு சட்டபூர்வமான அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி இருந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சினை அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றார்.

அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் 51 ஆவது சரத்தின் கீழ், தற்போதைய ஜனாதிபதி அரசியல் அமைப்பில் கூறப்பட்டு உள்ளதைப் பொருட்படுத்தாமல், அந்த காலத்தின் இறுதி வரை, தேசிய பாதுகாப்பு, மகாவலி மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் என்ற விடயத்தை எடுத்துக் கொள்ளலாம். அல்லது எந்த அமைச்சுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவரால் தீர்மானிக்க முடியும்.

அதன்படி, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடியும் வரை மட்டுமே இது போன்ற விடயங்களை நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பபட்டு உள்ளது.