பாட்டியைப் பார்ப்பதற்காக எனது கொள்கையைக் கைவிடமுடியாது: அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரஷிடா ட்லைப்பும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதிக்கு வந்து தனது பாட்டியை பார்த்து செல்ல அனுமதி தருவதாக கூறியது. ஆனால் இந்த அனுமதியை ஏற்க அவர் மறுத்து விட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “என் வாயை மூட வேண்டும், என்னை கிரிமினல் போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் நான் இஸ்ரேல் போய் என் பாட்டியை பார்த்தால், அது நான் இனவெறி, ஒடுக்குமுறை, அநீதிக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்து விடும்” என குறிப்பிட்டார்.