பசுபிக் பகுதியில் சீனாவின் நடவடிக்கையை எதிர்கொள்ள தயார்-அமெரிக்கா

மேற்கு பசுபிக் பகுதியில் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள, அமெரிக்கா தனது கடலோர காவல் படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது என அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை ‘பசுபிக்கிற்கான சக்தி’ என வர்ணித்துள்ள ரொபேர்ட் ஓ பிரையன், சீனாவின் அறிவிக்கப்படாத, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கை, இந்தோ பசுபிக் பகுதியில் உள்ள நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்துதல் போன்றன  அமெரிக்காவின் இறைமையை பாதிக்கும் என்றார்.

மேலும் சீனாவின் இந்த தீயநோக்கங்களை கொண்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு, எல்லை பாதுகாப்பு கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்துவது அவசியம் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தென்பசுபிக்கில் உள்ள பகுதிகளில் கடலோர கண்காணிப்பு கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச்செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் ஆசிய விஜயத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்  மார்க் எஸ்பருடன் (Mark Esper)  இணைந்து ஆசியாவிற்கான விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த பயணத்தில்,சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் விவகாரம் முக்கிய விடயமாக இடம்பெறவுள்ளது.