நீளமான வாக்குச் சீட்டு தேர்தல் நேரம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்களிப்புக்கா அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள தேர்தல் மாவட்ட மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்களில் வாக்களிக்கும் மக்களின் நன்மை கருதி தேர்தல் நிலையங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4991 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

வேட்பாளர்கள் அதிகமாகவுள்ள காரணத்தினாலும் வாக்கு சீட்டு நீளமாகவுள்ள காரணத்தினாலும் வாக்காளர்களின் நன்மை கருதி காலை 07மணி முதல் மாலை 05மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 1,15,924 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,87,672 பேரும் ,பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,645 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 1682 பொலீஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 320பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. தேவையான இடங்களுக்கு ரோந்து பணிகளை அவர்கள் முன்னெடுப்பார்கள். நாளை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கும்போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை பொறுத்து மூன்று வகையான வாக்கு பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் மூன்று சர்வதேச கண்காணிப்பு அமைப்பு கண்காணிப்பில் ஈடுபடுவதுடன் உள்ளுர் கண்காணிப்பு அமைப்புகளும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், மண்முனை மேற்கு, பட்டிப்பளை,வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகும் பிரதேசமாக இருப்பதன் காரணமாக அதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வனஜீவராசி திணைக்களத்தின் அனுசரணையுடன் 09 குழுக்கள் இந்த ஆறு
பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அந்த அடிப்படையில் நேற்று முதல் அவர்கள் காவல் கடமையினை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 53 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. பாதகமான தேர்தல் வன்முறைகள் குறைந்தளவிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை தேர்தல் விதிமுறைகளை மீறியவையாக இருக்கின்றன. தேர்தல் பிரசாரங்கள் முடிவுற்றதன் பின்னர் நேற்று இரவு 12மணிக்கு பின்னர் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.