தேர்தல் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன – தேசப்பிரிய

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் நாட்டிற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 12, 845 வாக்கெடுப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு, வாக்களிப்பு நடைபெறவுள்ளது. முதன்முறையாக அட்டைப் பெட்டிகளாலான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்குச் சீட்டு நீளமாக அமைந்துள்ளதால், வழமைக்கு மாறாக 1மணிநேரம் வாக்களிக்களிப்பு  நீடிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் சின்னத்தை அடையாளம் கண்டு கொள்ள மேலதிக நேரம் தேவைப்படுவதால், இந்த நேர நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் சுமார் 3 இலட்சம் அரசாங்க அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் 60,175 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 8,080 சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். தேவையேற்படும் பட்சத்தில் மேலதிக இராணுவ பாதுகாப்பும் வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

ele 2019 தேர்தல் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன - தேசப்பிரியதேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக 5,800 பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. வாக்களிப்பதற்கு தமது சொந்தப் பிரதேசங்களுக்கு மக்கள் பயணிப்பதற்காக, சிறப்பு பேருந்து சேவை வழங்கப்படுகின்றது. இந்தத் தகவலை இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, மேலதிகமாக சுமார் 1,500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேவேளை யாழ்.தீவகத்திற்கான வாக்குப் பெட்டிகள் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக நெடுந்தீவிற்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினரின் பாதுகாப்புடன் அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்டது.

நாளை வாக்களிப்பு முடிந்தவுடன் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் உலங்கு வானூர்தி மூலம் மதிதிய கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அதிகாரம் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முகத்தை மறைக்கும் விதத்தில் ஆடைகளோ அல்லது மூக்குக் கண்ணடியோ அணிந்திருந்தால், அதை நீக்கி, உரியவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வாக்களிப்பு நிலையத்திலுள்ள இரண்டாவது அதிகாரி வாக்காளரின் பெயரை கூறியதும் சிறிது நேரத்தின் பின்னரே முகத்தை மூடும் வகையிலான ஆடையை மீண்டும் அணிய சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியில்லாத ஒருவருக்கு வாக்களிப்பு நிலைய வளாகத்திற்குள் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

தேர்தல் தொடர்பாக போலிப் பிரச்சாரங்கள், இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பாதிக்கும் என்பதால் போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுதல் தொடரும் பட்சத்தில் சமூகவலைத்தளங்களை முடக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.