“நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” இரத்தத்தால் கையெழுத்திட்டு மோடிக்கு கடிதம் அனுப்பிய விவசாயிகள்!

டெல்லியில் 27 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்தத்தை மையாக மாற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று இரத்தத்தால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது எங்களுடைய இரத்தம். எங்கள் உரிமைகளைப் பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப் பெரிய பாவம். விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர்கள் பறிக்கக்கூடாது என்று குருநானக் கூறியிருக்கிறார். குருத்வாராவில் போய் பிரார்த்தனை நடத்திய உங்களுக்கு அது ஏன் தெரியாமல் போய் விட்டது? என்று இரத்தத்தால் எழுதிய அந்த கடிதத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இன்று(22) இரண்டாவது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசின் பேச்சுவார்த்தையை மீண்டும் விவசாயிகள் சங்கங்கள் நிராகரித்துள்ளன. இதுவரை நடைபெற்ற 5 கட்டப் பேச்சுவாரத்தை விபரங்கள் தான் மீண்டும் அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக அவர்கள் எதையும் கூறவில்லை.

3 வேளாண் சட்டங்களையும் இரத்துச் செய்து விட்டு அனைவருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க புதிய சட்டம் இயற்ற ணே்டும் என்பதே தங்களின் திட்டவட்டமான கோரிக்கை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 65 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சிங் என்பவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை கவனித்த மற்ற விவசாயிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அத்துடன் கடந்த 20 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி விட்டு உடல்நலக் குறைவால் சொந்த ஊர் திரும்பிய பஞ்சாப் மாநில விவசாயி ஹசாம் சிங் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு 34ஆக உயர்ந்துள்ளது.