நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வனுஷி வால்டர்ஸ் இற்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ஸ

நியூசிலாந்தில் கடந்த சனிக்கிழமை(17)  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய இலங்கையைச் சேர்ந்த வனுஷி வால்டர் அவர்களுக்கு நாமல் ராஜபக்ஸ தனது ருவிற்றர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நியூசிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணான வனுஷி வால்டர்ஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

இவர் முன்னாள் கொழும்பு மேயர் சரவணமுத்துவின் பேர்த்தியாவார். யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது ஐந்து வயதில் பெற்றோருடன் இலங்கையிலிருந்து நியூசிலாந்தில் குடியேறியவர். தந்தை வழி பாட்டி லூசியா சரவணமுத்து. 1931இல் இலங்கை அரசு பேரவையின் வடக்குத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தாத்தா சரவணமுத்து, கொழும்பு முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரில் தான் கொழும்பிலுள்ள சரவணமுத்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

வனுஷியின் தந்தை ஜனா இராஜநாயகம். தாயார் பவித்திரா என்பவராவார். வனுஷி சர்வதேச மன்னிப்புச் சபையில் முக்கிய பணியாற்றியிருந்தார். நியூசிலாந்தில் முதன்மையான மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞருமாவார். இவர் வால்ட்டர்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர் நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெசன்ட் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தார். இவருக்கு மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸ தனது ருவிற்றர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார்.