நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்: சம்பந்தன்

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஹர்த்தால் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தததை இதையடுத்தே இரா.சம்பந்தன் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“இறந்தவர்களை நினைவுகூர்வது ஜனநாயக உரிமை. அதை எவரும் தடுக்கவே முடியாது. ஒரு மனிதர் எந்த வழியில் உயிரிழந்தாலும் அவரை அவரது சமூகம் நினைவுகூர உரித்துண்டு. இதைத் தடுத்து நிறுத்துவது சர்வாதிகார செயல். தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ்பேசும் சமூகத்தினரை இலக்கு வைத்து அராஜகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு.

இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்நீத்தவரே தியாகி திலீபன். அவரை நினைவுகூர தமிழ்பேசும் சமூகத்துக்கு முழுமையான உரிமையுண்டு. அந்த உரிமை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆட்சியில் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்” என்றார்.