நினைவு கூரல் விவகாரம் – மட்டக்களப்பில் ஆறு பேர் மீது வழக்கு

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக குற்றம்சுமத்தி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டு. தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் திலீபன் என்பவரை நினைவுகூருமுகமாக இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர் என்ற   முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் ஒப்பத்துடன் இந்த அழைப்பாணைகள் குறித்த ஆறு பேருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.