நாடுதிரும்பிய இலங்கையருக்கு கொரோனா தொற்று இல்லை

வுகான் நகரில் இருந்து மீட்கப்பட்ட 76 இந்தியர்கள் உட்பட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் நகரிலிருந்து இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக முதலில் இரண்டு எயார் இந்தியா விமானங்களில் 647 இந்தியர்கள் நாடு திரும்பியிருந்தனர். இதனையடுத்து, வுகான் நகரில் தவிக்கும் மேலும் சில இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சி17 குளோபல் மாஸ்டர் இராணுவ விமானத்தில் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி வுகான் நகருக்கு சென்றது.

மருத்துவ உபகரணங்களை சீன அதிகாரிகளிடம் வழங்கிய பின்னர், அந்த விமானத்திலேயே 76 இந்தியர்கள் மற்றும் பங்காளதேசத்தைச் சேர்ந்த 23 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர், மியான்மார், மாலைத்தீவைச் சேர்ந்த தலா 2 பேர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடகஸ்கர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 112 மீட்டு கடந்த 27ஆம் திகதி புதுடெல்லிக்கு அழைத்துவந்தனர்.

இந்தியா அழைத்துவரப்பட்ட 112 பேரும் புதுடெல்லியில் உள்ள இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து வுகானில் இருந்து இந்தியா திரும்பிய அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என பரிசோதனைகள் செய்யப்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் வுகானில் இருந்து அழைத்துவரப்பட்ட 76 இந்தியர்கள் உட்பட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் வுகானில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் இன்னும் சில நாட்களுக்கு முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.