ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கைகளுக்கு இன்று நள்ளிரவுடன் வரவிருக்கிறது.

இந்தநிலையில், நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சுப நேரம் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாதம் 3ஆம் திகதி சுபநேரம் உள்ள போதிலும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒரு நாள் பிற்போட நேரிட்டுள்ளது. அவ்வாறு ஒரு நாள் பிற்போட்டால் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் நடத்தப்படும் நாளும் பிற்போட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதில் தாமதம் ஏற்படுவதனால் தேர்தலுக்கான சுப நேரம் குறுக்கிடும் எனவும் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

அதற்கமைய தொடர்ந்தும் ஜோதிடர்களின் ஆலோசனை பெற்றுக் கொண்டு எப்படியாவது நாளை திங்கட்கிழமை, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.