இந்தோனேசியா: அடிமைத் தனத்தை ஊக்குவிக்கும் புதிய சட்டம்

அண்மையில், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவால் கையெழுத்திட்ட  ‘வேலை உருவாக்கும் சட்டம்’  நவீன அடிமைத்தனத்துக்கு வித்திட்டுச் செல்லும் என இந்தோனேசிய தொழிலாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அவுட்சோர்சிங் முறையில் ஒருவேலைக்கு வெளியில் இருந்த தொழிலாளர்களை எடுத்துக்  கொள்ளும் இச்சட்டம் வழங்கும் வாய்ப்பை மிகவும் ஆபத்துக்குரியதாக இச் சம்மேளனம் பார்க்கிறது.

“தொழிலாளர்களை விற்கப்படுவதையும் ஏஜெண்டுகள் அவர்களை விற்பதையும்  அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. சர்வதேச அளவில், இந்த அவுட்சோர்சிங் முறையை நவீன அடிமைத்தனம் என்பார்கள்,” எனக்கூறியுள்ளார் இச்சம்மேளனத்தின் தலைவர் இக்பால்.

இந்த அவுட்சோர்சிங் தொழில் முறையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு அவரது சம்பளம், மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய பாதுகாப்பு, பணி பாதுகாப்பு எந்த தகவலும் தெளிவாக தெரிவிக்கப்பட மாட்டாது எனக் கவலைத் தெரிவித்திருக்கிறார் இக்பால்.

முன்பு சட்டத்திலிருந்த தூய்மைப் பணிகள், கேட்டரிங், பாதுகாப்பு, ஓட்டுநர்கள், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட சேவைத் துறைகளுக்கு மட்டுமே அவுட்சோர்சிங் வழியில் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதி உண்டு என்ற கட்டுப்பாடும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.