நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு

மாதத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னர் வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நடமாடும் நீதிமன்றம் இயங்கியது. ஆனால் யுத்த நடவடிக்கைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாதத்தில் இரண்டு நாட்கள் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை ஏற்படுத்தி தருமாறு கிராம மட்ட பொது அமைப்புக்கள் உதவிப் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானத்திற்காக முன்வைக்கப்பட்ட போது இது தொடர்பான கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், அதனை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இத் தீர்மானத்தின் அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நீதிபதிகளுடன் பேசி குறித்த விடயத்தை முன்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.