தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் -சுரேன் ராகவன் கோரிக்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ சொந்தமானதாக இருக்க முடியாதென்று தெரிவித்துள்ள,நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடமும் தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினை எட்டும் முகமாக  தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள், கிராமிய மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொல்பொருள் திணைக்க அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு  ஒன்று பத்திரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ சொந்தமானதாக இருக்க முடியாதென்றும் அவை இலங்கை  நாட்டுக்கு பொதுவானது என்பதனை தொல்பொருள் திணைக்களத்தினர் நினைவில் கொள்ளவேண்டும், தொல்பொருள் துறை தொடர்பில் கற்பிக்கும் களனி, பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களின் துறைசார் நிபுணர்களைக் கொண்டு தொல்பொருள் ஆராட்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களம் தமிழ் பிரதேசங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அப்பிரதேசங்களை சிங்கள பெயர்களைக் கொண்டு வர்த்தமானி அறிவித்தல்மூலம் அடையாளப்படுத்துவதாகவும் இது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும் அதனால் வர்த்தமானி அறிவித்தலில் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள் நிர்மலநாதன்  குறிப்பிட்டார்.