“தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” -பா.அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த மைத்திரிபால அரசாங்கம் நினைவு கூரும் உரிமையை ஒரு சலுகையின் அடிப்படையில் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த சூழலில் தற்போதைய கோட்டபாய அரசாங்கம் அதற்கு பலவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து இலக்கு மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், “உயிர்நீத்த எமது உறவுகளை நினைவுகூர முடியாத் தடைகளும், நீதிமன்ற உத்தரவுகளும் தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகிறது. இவைகள் மனித உரிமை மீறல் என்பதை எல்லோரும் அறிந்தாலும், இலங்கையில் ஆட்சியாளருக்கு எதிராக மனிதஉரிமை மீறல் தொடர்பான எந்த விடயமும் காத்திரமாக அமைந்ததாக சரித்திரம் இல்லை. அனைத்துலக சமூகத்தின் முன் இந்த விடயங்களை தொடர்ச்சியாக தமிழ்த் தரப்புகள் முன்வைத்த போதும், இலங்கை அரசிக்கு அழுத்தம் கொடுக்ககூடிய சர்வதேச சட்டங்கள் இலங்கையை நோக்கி தாக்கம் செலுத்தும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை.

ஈழ விடுதலைப் போரில் தம் உயிரை ஆகுதியாக்கிய உறவுகளை அனைத்து தமிழ் உறவுகளும் எந்த நாட்டில் வசித்தாலும் தொடர்ச்சியாக நினைவுகூர்ந்தே வருகின்றனர். ஆனால் இலங்கை நாட்டை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் மாறும்போது அவர்களின் மனநிலையைப் பொறுத்தே இங்கு சட்டங்களும், குறிப்பாக உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவுகூர்வதும் தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணமாக கடந்த மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் உயிர்நீத்த உறவுகளை நாம் நினைவுகூரக்கூடிய ஒருவிதமான சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போதைய புதிய ஜனாதிபதியாக கோட்டபாய அவர்களும், பிரதமராக அவரின் சகோதரர் மகிந்தராஷபக்‌ஷவும் கொண்ட சகோதர ஆட்சி இடம்பெறும்போது, உயிர்நீத்த எமது உறவுகளை நினைவு கூர முடியாத் தடைகளும், நீதிமன்ற உத்தரவுகளும் தற்போது எமக்கு எதிராக நடைபெறுகிறது.

இவைகள் மனித உரிமை மீறல் என்பதை எல்லோரும் அறிந்தாலும் இலங்கையில் ஆட்சியாளருக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பான எந்த விடயமும் காத்திரமாக அமைந்ததாக சரித்திரம் இல்லை.

அனைத்துலகச் சமூகத்தின் முன் இந்த விடயங்களை தொடர்ச்சியாக தமிழ் தரப்புகள் முன்வைத்தபோதும், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சர்வதேச சட்டங்கள் இலங்கையை நோக்கி தாக்கம் செலுத்தும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை

இதற்கு சரியான தீர்வு தமிழ்தேசிய கட்சிகள் புலத்திலும், நிலத்திலும் ஒற்றுமையாக, ஒன்றுபட்டு, ஒரு குரலாக, ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் அதேவேளை சர்வதேசத்திற்கு அழுத்தங்களையும் தொடர்ச்சியாக செய்வதே நல்லது.” என்றார்.