தொடரும் மழையால் ஸ்தம்பிக்கும் ஹட்டன் கல்வி வலயம்

எல் நினோ தாக்கம் காரணமாக, இலங்கையின் மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதி வாகி வருகின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹட்டன் கல்வி வலயம் அடிக்கடி பாதிப்புகளை எதிர்கொள்கின்றது.
குறிப்பாக, மழை பெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது. ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பெரும் பாலான பாடசாலைகள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடிய சூழலில் அமைந் துள்ளமையே இதற்குக் காரணமாகும்.
அதேநேரம், உரிய வடிகால் அமைப்புத் திட்டம் இல்லாத காரணத்தால், சிறிய அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப் பங்களில்கூட ஹட்டன் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப் படுகின்றது.
இந்நிலையில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகக் கட்டடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால், தங்களால் முறையாகப் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகத் தெரிவித்து, அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகக் கட்டடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால், அன்றாட அலுவலகப் பணி களை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, அலுவலகத்துக்குள் மழைநீர் புகுவதால் முக் கிய ஆவணங்கள் நனைந்து சேதமடையும் அபாயம் காணப்படு வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்த அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் பணியாற்றும் சுமார் 21 உத்தியோகத்தர்கள், 48 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட இடத்தில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேசைகள், கதிரைகள் மற்றும் அலுமாரிகள் உள்ளிட்ட அலுவலக உபகரணங்கள் காணப்படும் இந்த இடத்தில், போதிய வசதிகளின்றிப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும், மாதாந்தம் சுமார் 3,048 அதிபர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கும், 90 உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கான கணக்குப் பணிகளை இந்தப் பிரிவே முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறான முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில், பொருத்தமான பணிச்சூழல் இல்லாமை பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கலந்துரை யாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத் தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மழைநீர் ஒழுகும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்குவதுடன், பாதுகாப்பானதும் முறையானதுமான பணிச் சூழலை ஏற்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஹட்டன் கல்வி வலயத்தில் நிலவும் இப்பிரச்சினை தொடர்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீரவிடம் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த வருடம் 65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டதாகவும், இந்த வருடமும் 65 மில்லியன் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், காணிப் பிரச்சினை நிலவுவதால், இந்த அலு வலகத்தைத் தொழில் திணைக்கள வளாகத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மஞ்சுள சுரவீர, “ஹட்டன் கல்வி அலுவலகத்தின் பிரச்சினை என்பது இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இது சுமார் 1990ஆம் ஆண்டிலிருந்து நிலவி வரும் பிரச்சினையாகும். ஸ்ரீபாத வித்தியாலயத்தின் சிறியதொரு இடத்திலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது இந்த அலுவலகம் நனைகின்றது.
சுமார் 150இற்கும் அதிகமான பாடசாலைகளைக் கொண்டுள்ள இந்த அலுவலகத்தின் ஊடாக, 3,000இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால்,  இந்த அலுவலகம் ஸ்ரீபாத வித்தியாலய வளாகத்தில்  அமைந்துள்ளதால், அங்குள்ள பெற்றோர்களும் பழைய மாணவர்களும் அந்த இடத்தில் அலுவலகம் அமைந் திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பவர்கள் என்ற வகையில், அவர்களின் கருத்துகளையும் கவனத்தில் எடுத் துள்ளோம். தற்போது தொழில் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடி, தொழில் திணைக்கள வளாகத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள் ளோம். எனினும், இதனை உடனடியாகச் செயற்படுத்த முடியாது. அதற்கு சில காலம் எடுக்கும்” என்றார்.