தொடரும் கைதுகள் – அச்சத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

சிறீலங்காவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தனக்கும் தனது குடும்ப உறவினர்களுக்கும், கட்சிக்கும் எதிரான தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கடுமையான அச்சநிலை ஒன்று தோன்றியுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்தினா மற்றும் பாட்டாளி சம்பிக்க ரணவக்கா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளபோதும், சம்பிக்க ரணவக்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், முன்னாள் அமைச்சர்களான சரத் பொன்சேக்கா, விஜித் விஜிதமுனி, ராவூப் கக்கீம் மற்றும் றிச்சாட் பத்தியூடீன் ஆகியோர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னர் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு ஒன்றை மீண்டும் பதிவு செய்து பென்சேக்காவையும், அமைச்சராக இருந்த காலத்தில் 80 ஜூப் ரக வாகனங்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்து விற்பனை செய்தது தொடர்பாக விஜிதமுனியும் கைது செய்யப்படவுள்ளனர்.
அதேசமயம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முன்னாள் முஸ்லீம் அமைச்சர்கள் இருவரும் கைது செய்யப்படவள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டவரும், முன்னாள் சிறீலங்கா இராணுவத்தளபதியுமான மகேஸ் சேனநாயக்கா நாட்டைவிட்டு குடும்பத்துடன் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் சென்றுள்ள அவருக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது சிறீலங்கா அரசுக்கும் மேற்குலகத்திற்குமான முறுகல் நிலையை மேலும் அதிகரித்துள்ளது.