தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை

சிறீலங்கா தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட தமது நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் இன்று புதிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

தமக்கான நியமனங்கள் 16-09-2019 வழங்கப்பட்ட நிலையில் 18-09-2019 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமது நியமனங்கள் தேர்தல் ஆணையாளரினால் தேர்தலை காரணம் காட்டி 23-09-2019அன்று இடைநிறுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நிறைவுபெற்ற பின்னர் தமக்கான இடங்கள் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய கொள்கைகள்,பொருளாதார விவகாரங்கள்,மீள்குடியேற்றம் மற்றும்
பொருளாதாரம்,வடமாகாண அபிவிருத்தி,இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக அதன் செயலாளரினால் கையொப்பம் இடப்பட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதம் பத்திரிகைகள் வாயிலாக அறிவிப்பு செய்யப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு நேர்முகத்தேர்வுகளை எதிர்கொண்டு 16-09-2019அன்று நாங்கள் தெரிவுசெய்யப்பட்டதாக நியமனக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அதன் பின்னர் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து எங்களுக்கான வேலையொதுக்கீடுகள் தரப்பட்டு ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் சென்று கடமையினை பொறுப்பேற்குமாறு கோரிய நிலையில் மறுதினம் பிரதேச செயலகங்களுக்கு சென்றபோது எங்களது நியமனங்கள் தேர்தல்கள் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்டதாக கூறப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எனினும் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக எமக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அது தொடர்பில் எங்களுக்கு தெரியாது என தெரிவித்தனர்.அத்துடன் தேர்தல் முடிந்ததன் பின்னர் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலைப்பெற்று மீண்டும்
இணைத்துக்கொள்வோம் என மாவட்ட செயலகத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையாளர் மீண்டும் எம்மை இணைப்பு செய்யமுடியும் என அறிவித்துள்ள நிலையிலும் குறித்த அமைச்சே இதற்கான பொறுப்பினை கூறவேண்டும் என மாவட்ட செயலகத்தில் கூறப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சரியான முடிவு தெரியாத நிலையில் தாங்கள் உள்ளதாகவும் தமக்கான சரியான ஒரு தீர்வினை குறித்த அமைச்சோ, தொடர்புபட்ட அதிகாரிகளோ வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.