தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (14) நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் போது, சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று இறுதியாக சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பின் போது தேர்தல் அன்று இடம்பெறும் வேலைத்திட்டங்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் நிலையங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்தல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் முடிவிற்கு வந்துள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை 9 மாவட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 9பிரதி பொலிஸ்மா அதிபர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும், தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.