தேர்தலின் பின்னர் கூட்டமைப்பினரின் தீர்மானம்

சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேவையேற்படும் பட்சத்தில், பாராளுமன்றில் பெரும்பான்மையை பெறுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊர்காவற்றுறையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட போதே மேற்படி கருத்தை சுமந்திரன் வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயக்கம் காட்டாது என்றும், இதற்காக தமிழர்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பான புதிய முறையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாண கூட்டமைப்பு பிரதிநிதிகள், அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறவேண்டும் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.