தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து ஐ.தே.க. அடுத்த வாரம் தீர்மானம் – ருவான் விஜேவர்தன

ஐக்கிய தேசிய கட்சி தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனம் குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சி சீர்திருத்தங்கள் குறித்தும், வெற்றிடமாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து முடிவை எட்டஅடுத்த வாரம் செயற்குழு கூடும் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தன.

அத்தோடு பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் வெற்றிடமாக உள்ள நிலையில் இந்த மாதத்தில் புதிய அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து தீர்மானிக்க மேலும் காலத்தை எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் கட்சி பொறுமை காக்கவேண்டும் எனக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தீர்மானிக்கும் முன் பாராளுமன்றத்தின் முன்னேற்றங்களை கண்காணிக்கக் கட்சி விரும்புவதாக ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.