தேசத்தைக் காக்கும் தேயிலைத் தாரகைகள்: கொழுந்து பறிக்கும் கைகளுக்கு கடல் கடந்தும் இன்னல்கள் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகும். குறிப்பாக, ‘தேயிலை’ என்னும் கறுப்புத் தங்கம் இலங்கையின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை வகிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு மலையகப் பெண்களுடையதாகும்.
அண்மைய தசாப்தங்களில், இந்தப் பெண்கள் தோட்டங்களுக்குள் மாத்திரம் முடங்கிவிடாமல், நாட்டின் அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய் வதற்காக கடல் கடந்தும் சென்று உழைக்கின்றனர். 2024 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் தரவுகள், மலையகப் பெருந்தோட்டப் பெண்களின் இந்தப் புதிய பரிமாணத்தை உறுதிப்படுத்தியுள் ளன.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 10-12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை தேயிலைத் துறை வழங்குகிறது. இத்துறையின் வெற்றி என்பது முழுமையாக பெண்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. தேயிலை கொழுந்து பறித்தல் என்பது மிகவும் நுணுக்கமான வேலையாகும். இயந்திரமயமாக்கல் இன்னும் முழுமையாக வெற்றிபெறாத நிலையில், ‘இரண்டு இலைகளும் ஒரு மொட்டும்’ என்ற தரமான பறிப்பு முறைக்கு பெண்களின் மென்மையான கரங்கள் இன்றியமையாதவை.
கடும் மழை, அட்டைக்கடி மற்றும் குளிரான காலநிலை ஆகியவற்றுக்கு மத்தியிலும், நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையை எட்ட அவர்கள் மேற்கொள்ளும் உழைப்பு, இலங்கையின் தேயிலையை சர்வதேச ரீதியாக ‘சிலோன் டீ’ என்ற பிராண்ட் மதிப்பைப் பெற்றுக்கொள்ள அடிப்படையாக அமைகிறது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் நீண்டகாலமாக விவாதத்திற்குரிய ஒன்றாக இருந் தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெருந் தோட்டத் துறை வழங்கும் பங்களிப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான உழைப்பு பெண்களுடையதாகும்.
மலையகத்தில் புதிய போக்கு: வெளிநாட்டுப் புலம்பெயர்வு
2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இலங்கையிலிருந்து 672,249 நபர்கள் தற்காலிகமாக வெளிநாடுகளுக்குச் சென்று ள்ளனர். இதில் தேசிய ரீதியாக ஆண்களின் எண்ணிக்கை 61.4 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் மாத்திரம் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுவது ஒரு முக்கியமான மாற்றமாகும். தேசிய ரீதியில் ஆண்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்கின்ற போதிலும் மலையக பகுதிகளில் பெண்கள் தொழிலுக்காக வெளி நாடுகளுக்கு செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
மலையகத்தில் ஆண்களின் வருமானம் பெரும் பாலும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்குப் போது மானதாக இருப்பதில்லை. குடும்பத்தின் கடன் சுமையை குறைக்க அல்லது பிள்ளைகளின் எதிர்காலத்திற் காக பெண்கள் துணிச்சலாக வெளிநாடு செல்ல முற் படுகின்றனர். அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களுக்கான தேவை அதிகமாக இருப்பதும், அதற்கான முகவர் நடைமுறைகள் எளிதாக இருப்பதும் மலையகப் பெண்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாகின்றன.
வெளிநாட்டுப் பணவனுப்பல்  மற்றும் பொரு ளாதாரப் பலம்
இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வெளிநாட்டுப் பணவனுப்பல் மிக முக்கிய காரணியாக இருந்தது. 2024 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, வெளிநாடு செல்லும் பெண்களில் 34.3 சதவீதத்தினர் குவைத் நாட்டைத் தெரிவு செய்கின்றனர்.
இலங்கையின் மலையகப் பெண்கள் அங்கே ஈட்டும் ஒவ்வொரு டினாரும் இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க உதவுகிறது. வெளி நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பும் பணம் நேரடியாக கிராமப்புற மற்றும் தோட்டப்புறப் பொருளாதாரத்தைச் சென்றடைகிறது. இதன் மூலம் தோட்டப்புறங்களில் சிறு வணிகங்கள் மேம்படுதல், பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுதல் போன்றவை நிகழ்கின்றன.
இவ்வாறு சாதக காரணிகள் காணப்படுகின்ற போதிலும் வீட்டு பணிப்பெண்களாக மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்ற மலையக பெண்கள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அரபு நாடுகளுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ செல்லும் போது, அங்கிருக்கும் உள்ளூர் மொழியை சரியாகப் பேசத் தெரியாதது ஆரம்பத்தில் பெரும் தடையாக அமைகிறது.
இது எஜமானர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும், வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போகவும் காரணமாகிறது. பல வீடுகளில் போதிய ஓய் வின்றி 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். உடல் ரீதியான தாக்குதல்கள், மன ரீதியான சித்திரவதைகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகும் அபாயம் உள்ளது.
குடும்பத்தைப் பிரிந்து அறிமுகமில்லாத சூழலில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கவலை மலையக பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. ஒப்பந்தத்தில் கூறப்பட்ட ஊதியம் வழங்கப்படாமை அல்லது சம்பளம் தாமதப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. வேலை பெற்றுத் தருவதாகக் கூறும் இடைத் தரகர்கள் அதிகப் பணம் வசூலிப்பதோடு, தவறான தகவல்களைக் கூறி அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
வெளிநாடுகளில் பணியாற்றும் பல பெண்களுக் குத் தங்களின் அடிப்படை உரிமைகள் அல்லது தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யாரை அணுக வேண்டும் என்பது தெரிவதில்லை. கடவுச்சீட்டு எஜமானர்களால் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்களால் நினைத்த நேரத்தில் வெளியேறவோ அல்லது உதவி கோரவோ முடிவதில்லை. அவர்கள் அனுப்பும் பணத்தைச் சரியான முறையில் முதலீடு செய்யத் தவறுவதால், மீண்டும் நாடு திரும்பும்போது அதே வறுமை நிலையிலேயே இருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
தாய்மார்கள் வெளிநாடு செல்வதால், வீட்டில் உள்ள பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. உதாரணமாக இலங்கையையே உலுக்கிய ஒரு பிரதான சம்பவமாக மலையகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற போது அங்கு அவர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி, அவரது எஜமானர் அவரது கை மற்றும் கால்களில் 20-க்கும் மேற்பட்ட இரும்புக் ஆணிகளை அடித்து சித்திரவதை செய்தார்.
அவர் நாடு திரும்பிய பின்னரே அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணிகள் அகற்றப்பட்டன. வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் மலையக பெண்களின் பலர் உயிரிழந்து சடலமாக நாடு திரும்பிய சம்பவங்களும் காணப் படுகின்றன. அவ்வாறு உயிரிழப்பவர்களின் சடலங்களை மீள பெறுவதற்கு கூட அவர்களின் உறவினர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறான பல சம்பவங்கள் மலையக பகுதிக ளில் பதிவாகின்றன. எனவே, மலையகப் பெண்க ளின் உழைப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதார சக்கரத்தைச் சுழற்றுவதில் மலையகப் பெண்கள் இருமுனைப் போராளிகளாகச் செயற் படுகின்றனர்.
ஒருபுறம், நாட்டின் பாரம்பரிய ஏற்றுமதித் துறை யான தேயிலைப் பயிர்ச்செய்கையைத் தமது தோள்களில் சுமக்கின்றனர். மறுபுறம், வெளிநாடுகளில் உழைத்து அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருவதன் மூலம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கின்றனர். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024 தரவுகள் வெறும் எண்கள் அல்ல. அவை மலையகப் பெண்களின் தியாகம், துணிச்சல் மற்றும் நாட்டின் மீதான அவர்களின் அமைதியான பொருளாதாரப் பங்களிப்பின் சாட்சியங்களாகும். இவர்களுக்கான முறையான சமூக அங்கீகாரமும், ஊதிய உயர்வும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியது ஒட்டுமொத்த தேசத்தினதும் கடமையாகும்.