‘தெற்கில் உங்களுக்கு எதிர்ப்பு உருவாகி வருவதை உணரவில்லையா?’ வினாவுக்கு விக்கி பதில்

வடக்கு கிழக்கை சிங்கள பௌத்தம் என்ற அடைமொழிக்குள் கொண்டு வரமுடியாது என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனிடம் ´சிங்களவர்கள் பற்றியும் பௌத்தம் பற்றியும் கருத்துக்களை வெளியிட்டும் உங்களுக்கு தெற்கில் எதிர்ப்பு உருவாகி வருவதை உணரவில்லையா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு பதிலளித்து விக்னேஸ்வரன் இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கண்டுணர்ந்த உண்மைகளை வஞ்சகமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அது குறித்து பல வரலாற்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடி உண்மைகளை ஊரஜ்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுயநலம் கருதி தனது வாழ்க்கையையும் தனது பாதுகாப்பையும் மட்டும் கருதி இந்த விடயத்தை கூறவில்லை என தெரிவித்துள்ள அவர், மலிவான ஜனரஞ்சகத்திற்கு தான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி உள்ளிட்டோரும் அமைய போகும் புதிய பாராளுமன்றமும் இது குறித்த உண்மை தன்மையை உணரந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என கூறியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி சிங்கள பௌத்தத்தை நிலை நிறுத்த முன்வந்துள்ளதாகவும், அதற்கமைய வட கிழக்கு மாகாணங்களில் பௌத்த கோயில்கள், விகாரைகள், சின்னங்கள் யாவும் விரைவில் தலை நிமிர ஆரம்பித்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தற்போது வடகிழக்கில் புத்த சமய சின்னங்கள் விரைவாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர் அவற்றைத் தடுக்க முடியாமல் தமிழ்த் தலைவர்கள் என்று கூறப்படுபவரகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இராணுவத்தினர் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறான நிலைமைகளே நாட்டின் சரித்திரம் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்ததாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே தெற்கில் தன் மீது பரவலான எதிர்ப்பு எழுந்துள்ளதை தான் அறிந்துள்ளதாகவும், உண்மை கசக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு எனவும் விக்னேஸ்வரன் தனது பதில் மின்னஞ்சலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.