தெற்காசியாவில் மிக உயரமானதென கருதப்படும் தாமரைக் கோபுரம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையைக் கொண்ட தாமரைக் கோபுரம் (Lotus Tower) சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (16.09) திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு மத்திய பகுதியில் தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமரைக் கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷமால் ஜயதிலக்க தெரிவித்தார்.

சீனாவினால் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செலவிட்டது.

356.3 மீற்றர் உயரமான இந்தக் கோபுரம் தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்வதாக ஷமால் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்துள்ள இந்தக் கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடி என அளவிடப்பட்டுள்ளது.

சுமார் 1500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 50 வானொலி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் என்பவற்றிற்கான வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோபுரத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி,ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lotus a தெற்காசியாவில் மிக உயரமானதென கருதப்படும் தாமரைக் கோபுரம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களுக்கு எட்டிய தூரத்திலிருந்து தெரியக்கூடியவாறு இத் தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இக்கோபுரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்களை நடத்துவதற்கான மண்டபங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோபுரத்தின் 6ஆவது மாடியே மிகவும் சிறப்பு இடத்தை பிடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இங்கு அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இதனூடாக மக்களுக்கு கிடைக்கின்றது.

7ஆவது மாடியானது, கோபுரத்தின் உயரமான இடத்திற்குச் சென்று கொழும்பு நகரின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7ஆவது மாடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கோபுரமானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை வழங்கும் கோபுரமாக உள்ளமை சிறப்பம்சமாகும்.

8 மின்தூக்கிகளைக் கொண்ட இந்தக் கோபுரத்தில் நொடிக்கு 7 மீற்றர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி பொருத்தப்பட்டுள்ளமையும் ஒரு விசேட அம்சமாகும்.

தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல்  மயப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.