தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுடனான உறவை சரிசெய்யலாம் – அமெரிக்கா

ஜெருசலேமில் தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுடனான உறவை சரிசெய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய தலைவர்களை சந்தித்த பின்னர் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் அண்டனி பிளிங்கன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாலஸ்தீனிய ஆணைக்குழுவின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிரதமர் முகமது ஷ்தாயே ஆகியோருடன் ரமல்லாவில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது பாலஸ்தீனியர்களுக்கு அதன் இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள ஜெருசலேமில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மீண்டும் திறக்கும் பணியை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் காஸா போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்களில் நடந்த மோதலில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பல வாரங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனிய பதற்றம் அதிகரித்த பின்னர் இந்த வன்முறை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.