துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட் (Semih Lütfü Turgut) இன்று வியாழக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகன் மற்றும் துருக்கி மக்களின் வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் “இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டதற்கு எனது நாட்டின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன். உங்கள் தலைமையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு சமாதானத்தையும் செழிப்பையும் கொண்டுவரவும் அவர்களை வலுப்படுத்தவும் உதவும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துருக்கி – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் அடையாளமாக துருக்கிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்துகொள்ளுமாறு துருக்கித் தூதுவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இதில், பங்களாதேஷில் இலங்கையின் முதலீடு மற்றும் அங்கு பணிபுரியும் பெருமளவான இலங்கை பணியாளர்கள் குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.