துணிச்சல் இருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறுங்கள்: சிவாஜி சவால்

“போர் வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தும் இனவாதத்தைக் கக்கியுள்ளார். ஒன்றுக்கும் பயப்படமாட்டோம், ஐ.நாவிலிருந்தும் வெளியேறுவோம் என்ற பாணியில் சர்வதேசத்தைப் பார்த்து கூறியிருக்கிறார். உங்களால் முடிந்தால், நெஞ்சுரம் இருந்தால், முதுகெலும்பு இருந்தால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து, ஐ.நாவிலிருந்து வெளியேறுங்கள் பார்க்கலாம்.”

இவ்வாறு அரசுக்குச் சவால் விடுத்துள்ளார் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஜனாதிபதி கோட்டாபய நேற்று முன்தினம் பௌத்த சங்கப் பிரதிநிதிகளுடனான மாதாந்தச் சந்திப்பில் ஈடுபட்டார். ஒரு நாட்டின் ஜனாதிபதி, பௌத்த பீடங்களுடனோ, மதத் தலைவர்களுடனோ மத வளர்ச்சி பற்றிக் கலந்துரையாடுவதை நாம் தவறெனக் கூற முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற சாட்டை வைத்திருக்கிறார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கள பௌத்த தலைவர்கள் ஏனைய மதங்களைப் புறந்தள்ளி, பௌத்தத்தின் வளர்ச்சிக்காகச் செயற்பட்டு வருகிறார்கள்.

எண்ணிக்கையைக் குறைக்க இனப்படுகொலை நடந்தது. 10 இலட்சம் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. கிழக்கில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அம்பாறை 1960 இல் உருவானது. அங்கு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் தமிழ் மக்களை சிறுபான்மையாக்கும் செயற்பாட்டைச் செய்கிறார்கள். வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எல்லாவற்றையும் விட வரலாற்றுத் திரிபை மேற்கொள்கிறார்கள். தொல்பொருள் திணைக்களம் என வைத்துக்கொண்டு அதன்மூலம் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலையே மேற்கொள்கிறார்கள். கடந்த ஆட்சியில் அந்த அமைச்சுக்குப் பொறுப்பாக சஜித் செயற்பட்டபோதும் அதுதான் நடந்தது.

யார் வந்தாலும், சிங்கள பௌத்த நோக்கங்களை முன்னெடுப்பதே அவர்களின் திட்டம். வடக்கு-கிழக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதை வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால் அதை மூடி மறைத்து, அல்லது தென்னிலங்கை அல்லது வேறு இடங்களில் கண்டெடுத்த சிலைகளைக் கொண்டு வந்து புதைத்துவிட்டு அங்கு புராதன பௌத்த விகாரைகள் இருந்ததாக திரிவுபடுத்தி, ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் கனகச்சிதமாக நடந்து வருகின்றன.

இதேபோன்ற ஒரு நடவடிக்கைதான் இப்பொழுதும் நடக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய, நாட்டின் எந்த பகுதியிலிருந்து வரும் கருத்தையும் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை. வடக்கு, கிழக்கிலிருந்து எழும் எதிர்ப்பு குரல்களையும் அவர் பொருட்படுத்தப் போவதில்லை. மே மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற யுத்தவெற்றி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையை வாழ்த்த அகராதியில் வார்த்தைகள் இல்லையென பௌத்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தளவிற்கு பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தும் இனவாதத்தை கக்கியுள்ளார். ஒன்றுக்கும் பயப்பிட மாட்டோம், ஐ.நாவிலிருந்தும் வெளியேறுவோம் என்ற பாணியில் சர்வதேசத்தைப் பார்த்துக் கூறியிருக்கிறார். உங்களால் முடிந்தால், நெஞ்சுரம் இருந்தால், முதுகெலும்பு இருந்தால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து, ஐ.நாவிலிருந்து வெளியேறுங்கள் பார்க்கலாம். அதன் பின்னர் என்ன நடக்குமென்பதை பார்க்கலாம்.

எங்களுக்கு இப்பொழுது நீதி கிடைக்காவிட்டால் என்றும் கிடைக்காதென்று அல்ல. நீதி தாமதப்படுத்துவது, நீதி மறுக்கப்படுவதற்கு சமன். ஆனால், அண்மையில் ருவாண்டா இனப்படுகொலையுடன் தொடர்புடையவர் அண்மையில்தான் கைதானார். தாமதமானாலும் தீர்ப்புக்கள் வந்துள்ளன. 11ஆண்டுகள் சென்றாலும், இன்னும் ஓரிரு ஆண்டில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய வாய்ப்பொன்று உருவாகும். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் அரசியல் கட்சிகள் வேறுபாட்டை மறந்து ஒன்றாகக் குரல் கொடுக்கவேண்டும்.

எமது எத்தனையோ வரலாற்றுச் சின்னங்கள் அழிவடைந்த நிலையில் உள்ளன. அநுராதபுரம் ருவான்வெலிசாய விகாரைக்கு அண்மையில் காடுகளுக்குள் பல இந்து கோயில்கள், அரண்மனைகளின் இடிபாடுகள் காணப்படுவதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். பொலன்னறுவை காலத்திற்குரிய பல சின்னங்களை மீட்க அவர்கள் தயாரில்லை. பல விடயங்களை மறைக்கப் பார்க்கிறார்கள்.

கோட்டாபயவுக்கும் அவரது அரசுக்கும் நாம் சொல்லிக் கொள்வது, நீங்கள் இவ்வாறு எங்களை சிறுபான்மையாக்கும் இனவெறித் திட்டத்தை நீங்கள் செயற்படுத்தினால் நாட்டில் இனவெறித் திட்டத்தை செயற்படுத்தினால், இந்த நாட்டில் இனநல்லிணக்கமும், நிரந்தர சமாதானமும் ஏற்படாது.

விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது, கந்தரோடையிலிருந்த பௌத்த சின்னங்களை அப்புறப்படுத்த அவர்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? வேரோடும், வேரடி மண்ணோடும் அவர்களால் அகற்றியிருக்க முடியும். வரலாற்றை இல்லாமலாக்கவேண்டுமென்ற நோக்கம் அவர்களிடமில்லை. உங்கள் வரலாற்றை நீங்கள் சொல்லுங்கள். எங்கள் வரலாற்றை நாங்கள் சொல்கிறோம். ஆனால் நீங்கள் திட்டமிட்டு எங்கள் வரலாற்றை அழித்து, இல்லாததைப் புகுத்தி உங்களுடைய வரலாற்றைத் திணித்து பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதைத்தான் நேற்றைய சந்திப்பு எடுத்துக் காட்டுகிறது.

பௌத்த சின்னங்களை அடையாளம் காணவும், பாதுகாக்கவும் குழு அமைத்து நீங்கள் செயற்பட முனைந்தால், நாமும் மக்களைத் திரட்டி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் அமைச்சரவை என்று ஒன்று இருப்பதென்றால் இருக்கட்டும், இல்லாமல் போனால் போகட்டும், படை அதிகாரிகளும், பௌத்த பிக்குகளும் போதும் என்ற அடிப்படையிலேயே செயற்படுகிறார்” என்றார் சிவாஜிலிங்கம்.