தவணைமுறைக் கட்டண பணியாளரின் செயலால் 5 பிள்ளைகளின் தாய் பலி

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியமையால் மனமுடைந்த ஐந்து பிள்ளைகளின் தாயார் தனது உயிரை மாய்த்துக் கொண்ட துயர சம்பவம் விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த சுவிதன் அனுசுயா ( வயது 34) என்ற இளம்தாயாரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார். அவரது முதல் பிள்ளைக்கு 10 வயது என்று விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.அவரது விசாரணையில் தெரிவிக்கப்பட்டமை வருமாறு

கணவர் லீசிங் முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்குரிய தவணைக் கட்டணங்களை அவர் செலுத்தாததால் லீசிங் நிறுவன பணியாளர்கள் அவரது வீட்டுக்கு புதன் மாலை சென்றுள்ளனர்.

கணவர் வேலைக்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ள நிலையில் மனைவி அங்கு இருந்துள்ளார்.லீசிங் பணத்தை ஒழுங்காக செலுத்தாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் கணவர் வேலைக்குச் சென்றுள்ளார் என்றும் இரண்டு நாள்கள் தவணையில் பணத்தை செலுத்துவதாகவும் மனைவி கேட்டுள்ளார்.

ஆனால் லீசிங் பணியாளர்கள் அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.இதனை அயலவர்கள் கண்டுள்ளனர்.இதனால் மனமுடைந்த அவர் தூக்கிலிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.