தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர், முஸ்லிம்களுக்கு மறைமுக ஆதவு?

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் முஸ்லிம்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள்,சிங்கள மக்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள் எனத் தெரிவித்த சீ.யோகேஸ்வரன், இவ்வாறு ஆதரவினை கொடுத்துவிட்டு எவ்வாறு கிழக்கின் தனித்துவம் பேணமுடியும்.கிழக்கினை பாதுகாக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோது சில ஆதரவுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்தது. அந்தவகையில் அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. ஐ வீதி திட்டத்தின் கீழ் நல்லாட்சியில் வீதி அபிவிருத்தி திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டத்தின் கீழ் இன்று பல வீதிகள் புனரமைக்கப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 வீதிகள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்படுகின்றன.

அதேபோன்று பாடசாலை கட்டிடங்கள்,கிணறுகள்,பொதுக்கட்டிடங்கள் என பல அபிவிருத்திகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்ததன் ஊடாக இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கம்பிரலிய திட்டத்தின் ஊடாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாகவும் இதர அமைச்சுகள் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று சிலர் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முட்டுக் கொடுத்தவர்கள் எதுவும் செய்யவில்லையென்று கூறுகின்றார்கள். பல கோடிக்கணக்கில் நாங்கள் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத் திருக்கின்றோம். பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தற்போது நடக்கும் சில வேலைத்திட்டங்கள் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சில ஆதரவுகளை வழங்கியதன் மூலம் பெற்றுக் கொண்ட வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி எங்களை ஏமாற்றியதும் உண்டும். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டு தானாகவேண்டும். வாழைச்சேனை காகிகதாலை நாங்கள் எடுத்த முயற்சியின் காரணமாகவே இன்று இயங்குகின்றது. அதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வாழைச்சேனை காகிதாலையினை மூடிவிட்டு வேறு திட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை முறியடித்து கடதாசியாலையினை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கையெடுத்தோம். கடந்த காலத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம் ஆட்சிமாற்றம் காரணமாக அவற்றினை எங்களால் தொடர முடியாமல்போனது.

கடந்த காலத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தோம்.பெரியமாதவனை,மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் அம்பாறை மாவட்ட சிங்கள மக்கள் பௌத்த பிக்குவின் அனுசரணையுடன் அத்துமீறி குடியேறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் வந்தனர். அப்போதிருந்த மாகாண விவசாய அமைச்சருடன் இணைந்து பல நடவடிக்கைகள் எடுத்தோம். அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் பேசி அத்துமீறி குடியேறிய அனைத்து சிங்கள மக்களையும் அங்கிருந்து வெளியேற்றினோம்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பவர்கள் பெரியமாதவனை, மயிலத்தனையில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களை நாங்கள் வெளியேற்றிவைத்தோம். இந்த அரசாங்கத்தில் அவர்கள் மீண்டும் குடியேறுகின்றனர்.

அண்மையில் அந்த குடியேற்றங்களை பார்வையிட சென்ற மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் சென்றபோது தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராகவும் உள்ள பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன், அவர்களை குடியேறுவதற்கு அனுமதித்ததாக கூறினார்கள். சந்திரகாந்தன் அன்று சிங்கள மக்கள் குடியேறுவதற்கு அனுமதித்திருக்கின்றார்.

இவர்கள் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முகத்தை காட்டுவதுடன் இரகசியமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றார்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் என்பது தெளிவாக தமிழ் மக்களுக்கு புரிந்துள்ளது.

இதேபோன்றுதான் ஹிஸ்புல்லாவின் புனானை பல்கலைக்கழகமும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முழுமையான ஆதரவுடன்தான் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லிம்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள்,சிங்கள மக்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள்.இவ்வாறு மாவட்டத்தில் கொடுத்துவிட்டு கிழக்கின் தனித்துவம் பேணமுடியும். கிழக்கினை பாதுகாக்கமுடியும். இதனை நாங்கள் சிந்திக்கவேண்டும்.

ஆனால் நாங்கள் நடவடிக்கையெடுத்தோம். பெரியமாதவனை,மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் இருந்த சிங்கள மக்களை வெளியேற்றி,அந்த பகுதிகளை மேய்ச்சல் தரைக்கு பிரகடனப்படுத்த நடவடிக்கையெடுத்தோம்.வர்த்தமானியில் வருவதற்கு காலதாமதமாகிக்கொண்டிருந்தது. மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கு வருகின்றனர். தமிழ் மக்கள் சந்திரகாந்தனுக்கும் வியாழேந்திரனுக்கும் ஆணை வழங்கியுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மாவட்ட மக்களின் காணிகளை காப்பாற்றவேண்டும்.

மகாவலி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விகிதாசார படி ஒதுக்கப்பட்டது ஆனால் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலேயே சிங்களவர்கள் அத்துமீறி காணிகளை பிடிக்கின்றனர். இவர்களை வெளியேற்றுவற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் நடவடிக்கை யெடுக்கவேண்டும்.