தமிழ் இளைஞர்களுக்கு சிங்களத்தில் சான்றிதழ் வழங்கியதால் சர்ச்சை

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சிங்கள மொழியில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை தமிழ் இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

வட மாகாணத்தில் நடத்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களுக்கு, இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட சான்றிதழ், முழுமையாக சிங்கள மொழியில்  இருந்துள்ளதையடுத்து தமிழ் இளைஞர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த  சான்றிதழை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவி பணிப்பாளர் தபேந்திரன்  கருத்து தெரிவிக்கையில்,

“குறித்த சான்றிதழ் இளைஞர்களுக்கு வழங்குவதற்காக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும், இந்த சான்றிதழில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் கையெழுத்து உள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக தமிழ் மொழி எழுதுவினைஞர்கள் கடமைகளுக்கு வராததால், சிங்கள மொழி எழுதுவிளைஞர்களின் ஊடாக இந்த சான்றிதழ் அச்சிட்டது.

தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாதமையினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இளைஞர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தேவையான மொழியில் சான்றிதழை வழங்குவதற்கு தலைமை அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளது.” என்றார்.