தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்…

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன.

அதில் சிலவற்றை செயல்படுத்த முடியும். சிலவற்றை செயல்படுத்த முடியாதவை. இதில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதின் நோக்கம் என்னவென்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையின் செயலாக்கத் தன்மையையும், செயலாக்கமற்றத் தன்மையையும் தெளிவாக அறிய தூண்டுகின்ற சிந்தனையாக இக்கட்டுரை அமையும் என்று எதிர்பார்க்கின்றேன்.

தேர்தல் அறிக்கையின் இயல்பு

தேர்தல் அறிக்கை ஒரு கட்சியின் கொள்கையை படம்பிடித்து காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. மக்களது தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் தெளிவாக விளக்குவது இந்த தேர்தல் அறிக்கையாகும்.

மக்களுக்கு சலுகைகளை வழங்குவதைவிட உரிமைகளை வழங்க வழிவகுப்பது இந்த தேர்தல் அறிக்கையாகும். ஒரு நாட்டை எதை நோக்கி வழிநடத்தவேண்டுமென்று வழிகாட்டுவது இந்த தேர்தல் அறிக்கையாகும். தேர்தல் அறிக்கை ஓர் அரசின் செயல்திட்டமாகும். ஓர் அரசை செயல்பட வைக்கும் ஆற்றலாக தேர்தல் அறிக்கை இருக்கிறது.

தேர்தல் அறிக்கை கட்சிகளின் அனுபவத்திலிருந்தும், மக்களின் எதிர்பார்ப்பிலிருந்தும், தேவையிலிருந்தும் உருவாக்கப்படுகின்றது. தேர்தல் அறிக்கையை வைத்து ஒரு கட்சியின் தரத்தையும் கொள்கை பிடிப்பையும் அளவிடும் துலாக்கோலாக(தராசு) இருக்கிறது. தேர்தல் அறிக்கை ஓர் அரசின் அல்லது கட்சியின் நாடித்துடிப்பாக இருக்கிறது. ஆட்சிக்கும் கட்சியை வழிநடத்துவதற்கும் அடித்தளமாக இருக்கிறது. ஓட்டுமொத்த நாட்டினுடைய மனச்சான்றாக விளங்குகிறது. இது உண்மைத்தன்மையுடன் செயல்படும் ஒரு செயல்பாட்டறிக்கையாக இருக்கிறது.

தேர்தல் அறிக்கைகளில் ஈழப்பிரச்சினை

 தமிழ்நாட்டில் இரண்டு முதன்மையான கட்சிகளாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் கீழ் பல சிறிய கட்சிகள் கூட்டணி வைத்திருக்கின்றன.

இந்த இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் ஈழப்பிரச்சினையை கதைக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் எண் 13, 14 ஈழத்தமிழர்களின் நலவாழ்வைப்பற்றி விவரிக்கின்றன. எண் 15, 16, 17 தாயகம் திரும்பி ஈழத்தமிழர்களின் குடியுரிமையை பேசுகின்றன. அஇஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழருக்கு வாழ்வுரிமை(எண் 29), ஈழத்தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாட்டுதல்(எண் 30), இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை, குடியிருப்பு அனுமதி(எண் 31) பேசப்படுகின்றன.

பிற கட்சிகளது அறிக்கைகளில் ஈழப்பிரச்சினை முதன்மை கோரிக்கையாக வரவில்லை. பல கட்சிகள் ஈழத்தமிழ்ப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்கின்றன. பல கட்சிகள் ஈழப்பிரச்சினைப்பற்றி பேசுவர், ஆனால் எழுத்து வடிவில் தரமாட்டார்கள். எழுத்து வடிவில் தருவர், ஆனால் செயல்படுத்த மாட்டார்கள்.

  1. வாக்கு வங்கி:

ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாமல் இனிமேல் செய்வேன் என்றுரைப்பது நகைப்புக்குரியது. மலையக மக்களுக்கு குடியுரிமை தராமல் 60 ஆண்டுகளாக கடத்தியது மிகவும் வெட்கப்படவேண்டிய செய்தியாகும். வாக்குகளை பெறுவதற்காக இப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஈழப்பிரச்சினையை பேசினால் நமக்கு வாக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஆதாயம் தேடுகின்றன. வாக்கு மட்டும் தங்களது இலக்காக வைத்து செயல்படுகின்றனர்.

  1. மங்கும் தமிழ் உணர்வு:

முன்பு வெளிவந்த தேர்தல் அறிக்கைகளில் ஈழப்பிரச்சினை முதன்மையான இடம் பிடித்தது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கையில் முதன்மை இடமில்லாமல் முக்கியத்துவம் குறைந்து காணப்படுகிறது. நேரத்திற்கு ஏற்றாற்போல் இந்த பிரச்சினையை அணுகும் முறையை கடைப்பிடிக்கின்றனர்.

  1. அதிகாரமற்ற அறிக்கை:

மாநில அரசின் அதிகாரத்தை இந்திய ஒன்றிய நடுவண் அரசு பறித்துக்கொண்டது. மாநில அரசு அதிகாரமற்ற அரசாக இருக்கிறது.

இந்நிலையில் ஐ.நாவில் பேசுவது, இரட்டை குடியுரிமை தருவது போன்ற வாக்குறுதிகள் அதிகாரமற்ற வாக்குறுதிகளாக உள்ளன. மாற்று வழிமுறைகள் உள்ள வாக்குறுதிகளை தர தயாராக இல்லை.

  1. ஆராயாத அறிக்கை:

ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை கொடுத்தால் ஈழமண்ணில் ஆள்குறைப்பு நடைபெறும். இதனால் சிங்கள பேரினவாத அரசுக்கு மிகவும் ஆதரவாக அமையும். இன்று சிங்கள பேரிவாத அரசு தமிழர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுகொண்டிருக்கிறது.  ஆள்குறைப்பு தமிழர்களை பலவீனமாக்குவதாகும். அதனால் குடியுரிமை தருவதை நன்கு ஆராயமல் அறிக்கையில் சேர்ப்பது தவறான அறிக்கையாகும்.

  1. ஏமாற்றும் அறிக்கை:

மக்கள் நம்பிக்கையை இழக்கும் வகையில் அறிக்கைகள் வெளிவருகின்றன. காலத்தோடு செயல்படாமல் காலத்தை கடத்துவது நம்பிக்கையை இழக்கச் செய்யும். காத்திருக்க வைப்பது ஆர்வத்தை குறைக்கும். ஏமாற்றத்தை தரும் அறிக்கைகள் மக்களைச் செயலிழக்கச் செய்கின்றன.

இறுதியாகஇ தமிழ்நாட்டு தேர்தல் அறிக்கையில் அதிக நம்பிக்கை வைக்காமல் நமது இலக்கு நோக்கிய பயணத்தில் நிழல் தரும் மரமாக பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த அறிக்கைகள் ஈழப்பிரச்சினையை உயிரோடு, நம்பிக்கை இழக்காமல் முனனெடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். ஆனால் நமது உரிமையை, விடுதலையை நாம்தான் வென்றெடுக்க வேண்டும். அதற்கு பிறருடைய உதவிகளை, அறிக்கைகளை, உரைகளைப் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

இந்த தேர்தல் அறிக்கைகளை நமது இலக்குக்கு பயன்படும் ஆவணங்களாக பயன்படுத்த அறிந்துகொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கைகள் நமக்கு ஆதரவாக இருக்கின்றனவா? ஏதிராக இருக்கின்றனவா? என்று ஆராய்ந்து தமக்கு சதாகமானவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமக்கு ஆதரவாக உள்ள அறிக்கைகளை விட்டுவிடாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும். நமக்கு சாதகமாக இல்லாதவற்றை புறக்கணிக்க வேண்டும். நம்பிக்கை இழக்காமல் தொடந்து நமது விடுதலையை நோக்கி பயணிப்போம்.

முனைவர் ஆ. குழந்தை.

சென்னை