சாட்சியங்களை ஆவணப்படுத்தும் பொறிமுறை – 12 பணியாளர்களை ஐ.நா. நியமிக்கும்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சாட்சியங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் சட்ட ஆலோசகர்களையும், குற்றவியல் விசாரணையாளர்களையும் நியமிக்கவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த பிரேரணை நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையை நெருக்கமாக அவதானிப்பதற்கான இந்த செயன்முறையை ஐ.நா. ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை குறித்த இந்த விவகாரங்களைக் கையாள்வதற்காக ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் 12 பணியாளர்களைப் புதிதாக நியமிக்கவுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசகர்கள் உட்பட பலர் இதற்காக நியமிக்கப்படவுள்ளார்கள். சாட்சியங்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை இவர்கள் மேற்பார்வையிடுவதுடன், அதற்கான இணைப்பாளர்களாகவும் கடமையாற்றுவார்கள்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் நடைமுறைகள் உள்ளிட்ட, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து கண்காணிப்பதையும், அறிக்கையிடுவதையும் மேம்படுத்த வேண்டும் என இந்தப் பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைக் கோரியுள்ளது.

மனித உரிமைகள் மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் நடைமுறைகளை முன்னெடுப்பதற்கான தகவல்கள் சாட்சியங்களை சேகரிப்பது, ஒருங்கிணைப்பது, பகுப்பாய்வு செய்வது, பாதுகாப்பது என்பவற்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்ளும்.