தமிழ்த் தேசிய பேரவையினர் இந்தியாவுக்கு கடிதம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் இன்று (05) சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் நிறைவில் தமிழ் தேசிய பேரவையினரால் கடிதம் ஒன்று இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

“கடந்த 77 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் இனமுரண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம்” என்ற கோரிக்கையுடன் இந்த கடிதம் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது.

“இனமுரண்பாட்டிற்கான தீர்வாக இலங்கை அரசு தற்போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்த அரசியலமைப்பில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்படுவது இன்றியமையாததாகும்.

அந்த நோக்கத்துடன், தமிழ்நாட்டிலுள்ள எமது உறவினர்களின் ஆதரவுடனும், தமிழ்நாடு முதலமைச்சரினதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைமைகளினதும் ஒத்துழைப்புடனும், இந்திய அரசின் தலையீட்டை நாடி வந்துள்ளோம்” என்று தமிழ் தேசிய பேரவையினர் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில், இந்தியாவின் தலையீட்டின் விளைவாக 1987 ஆம் ஆண்டின் இந்திய–இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

அந்த உடன்படிக்கையில், தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்கள் என அங்கீகரிக்கப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த ஒரே நிர்வாக அலகாக இருந்து சுயாட்சியை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆயினும், அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, இலங்கை அரசு அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி, ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாகாண சபை முறையை நிறுவியது.

இந்திய–இலங்கை உடன்படிக்கையின் உண்மையான நோக்கத்தையும், ஈழத் தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அரசியல் அபிலாஷைகளையும் பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே மாகாண சபை முறை இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.

பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை இலங்கையின் கடுமையான ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் அமைந்துள்ள காரணத்தினால், பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் தொடர்பான வழக்கில் இலங்கை உயர்நீதிமன்றம், பொருளுள்ள அதிகாரப் பகிர்வு எதுவும் சாத்தியமில்லை என்றும், அனைத்து அதிகாரங்களும் இறுதியில் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே நிலைத்திருக்கின்றன என்றும் தீர்ப்பளித்தது என்ற விடயமும் தமிழ் தேசிய பேரவையினரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒற்றையாட்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் அந்த கடிதத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசு, 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசால் தயாரிக்கப்பட்ட “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பை இறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின் மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதனை வெளிப்படையாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த முன்மொழியப்பட்ட “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு, ஏற்கனவே தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தைவிடவும் பலவீனமானதாகும் என்றும் குறித்த கடிதத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசத்தையும், அதன் இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு முறையாக இலங்கையின் அரசியலமைப்பு மாற்றப்படாத வரையில், ஒரே நாட்டிற்குள் தமிழ்மக்களின் தனித்துவ அடையாளத்தையும் தேசிய இருப்பையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாகவும் தமிழ் தேசிய பேரவையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்திய அரசு இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்தி, முன்மொழியப்பட்ட “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு இயற்றப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை ஒழிக்கவும், தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.