தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை – மகிந்த

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூறியதாக செய்திகள் வந்திருந்தது யாவரும் அறிந்ததே.

இந்த செய்தியை உறுதிப்படுத்துவதற்காக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான என்.ரவிக்குமார் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஸ, சுதந்திர தினத்தின் போது சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீத் பாடப்பட வேண்டும் என்று அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பது தொடர்பாக வினவப்பட்ட போது, மனோ கணேசனின் செயற்பாடு இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகவே உள்ளது. அரசாங்கம் இதுவரை அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை. அப்படியான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின்  அது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்த முடியும். அதுகுறித்து நாம் சிந்திக்கவில்லை என்று கூறியதாக என். ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஜானக பண்டார தென்னக்கோனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கூறியதையே கூறியதாகவும் ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக பேசப்பட்டு வருமிடத்து, இது பற்றி எந்தவித மறுப்போ, அல்லது கருத்தோ தெரிவிக்காத அரசு, இப்போது இதற்கு பலத்த எதிர்ப்பு வருவதால் தங்கள் முடிவை மாற்றியது போல தெரிகின்றது.

எந்த நடைமுறையையும் அமுல்ப்படுத்துவோம் என்று அறிவிப்பதும், அதற்குத் தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், தாங்கள் அது பற்றி கூறவேயில்லை என்பதும் தற்போதைய அரசாங்கத்தின் சாதாரண ஒரு செயற்பாடாக உள்ளது. உதாரணமாக தமிழில் இருந்த பெயர்ப் பலகைகளை நீக்கியதைக் குறிப்பிடலாம்.