தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா தாயக உறவுகளின் மத்தியில் மேலெழுந்துள்ளதோடு பாரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது ஆட்சிப்பீடத்தில் இருப்பதற்கு எந்தவிதமான நிபந்தனைகளையோ, உடன்படிக்கைகளையோ செய்யாது வரவுசெலவுத்திட்டங்கள், பெரும்பான்மையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள், நம்பிக்கை இல்லாப்பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கள் உள்ளிட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமிழர்களையும் மறந்து தேசியத்தினையும் இழந்து காவல்தெய்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது. எத்தனையோ விமர்சனங்களும், வினாக்களும் பொதுவெளிகளிலும், ஊடகங்களிலும், ஏனைய பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டபோதும் அமைதியாக குஞ்சை அடைகாப்பது போன்று ஐ.தே.க அரசாங்கத்தின் மீது எந்தவிதமான கீறல்களும் விழாது பாதுகாத்து வந்திருந்த கூட்டமைப்பு இந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தான் பாதுகாத்து வந்திருந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடக்கம் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் சரவெடியாக அடுக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டது என்கிறார் தீடீரென விழித்தெழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மைத்திரி நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டார் என்கிறார் கம்பெரலிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா.

தமிழர் தாயகத்தில் பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பால் அழிவடையும் இந்து மதத்தைக் காப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்கிறார் தமிழ் மக்களின் அதிக ஆணைபெற்றவர் என்று மார்பு தட்டிவரும் சிறிதரன், புதிய அரசியலமைப்பு வராது விட்டால் நாடு பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்கிறார் சுமந்திரன்.

மைத்திரியும், ரணிலும் ஏமாற்றிவிட்டதால் அரசாங்கத்தினை பதவியில் தொடரவைப்பதா இல்லையான என்ற கோணத்தில் செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், கோடீஸ்வரன் என தமது மனதுக்குப்பட்டவகையில் அரசுக்கு எதிரான வார்த்தைகளை அள்ளிவீசுகின்றார்கள். சனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்காக ரணில் அரசாங்கத்தினை ஆட்சியில் அமரவைத்திருக்கின்றோம்.

யானை ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் அதன் பாகனாக இருக்கும் கூட்டமைப்பின் அங்குசத்தின் சுட்டுக்களிலேயே அது நகர்கின்றது என்று பூடகம் போட்டவர்கள் ஏன் இவ்வாறு திடீரென்று அரச எதிர்ப்புவாத கருத்துக்களை காட்டுத் தீயாய்ப் பரவ விடுகின்றார்கள் என்ற சந்தேகம் அனைவரினதும் மனதில் இயல்பாகவே எழுகின்றது. சிறீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய சனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ranil sampanthan தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்மறுபக்கத்தில் இனப்படுகொலையை அரங்கேற்றிய மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி தனது சனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்குரிய முனைப்புக்களைச் செய்துவரும் அதேநேரம் ஆரம்பகாலம் தொட்டு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக தமிழர்களை நசுக்கி வரும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 5ஆம் திகதி தனது புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை நிகழ்வையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் கட்சிகள் ஐ.தே.க தரப்புடன் இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் கூட்டமைப்பும் பெரும்பாலும் அவ்வாறான முடிவொன்றையே எடுக்கவுள்ளது. மகிந்த இனவழிப்புக்கு காரணமாக இருந்தவர் என்பதால் அவரை ஆதரிக்க முடியாது என்பதில் நியாயமான காரணம் இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப் பதற்கு கூட்டமைப்பிடம் நியாயமான காரணங்கள் எதுமே இல்லை.

மேலும் தற்போதும் அக்கட்சியின் அரசுக்கு எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி சரணாகதியடைந்து ஆட்சியில் அமர்வதற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு சனாதிபதி தேர்தல் உட்பட அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்களிடத்தில் வாக்குகளை கேட்டுச் செல்வதற்கு எவ்விதமான விடயங்களும் கையில்லை. உரிமைகளை பெற்றுத்தருவோம் என்றோ அல்லது அபிவிருத்தியை பெற்றுத்தருவோம் என்றோ கூறி தாம் சார்ந்திருக்கும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த பெருந்தேசியவாத கொள்கையைக் கொண்ட ஐ.தே.கவுக்கு வாக்குகளை சேகரிக்க முடியாது.

யானையின் தும்பிக்கையாக இருக்கும் தம்மீது தமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை பட்டவர்த்தனமாக புரிந்திருக்கும் கூட்டமைப்பு தேர்தல்களுக்கு முன்னதாக மக்களிடத்தில் செல்வதற்கான வழியை அமைப்பதற்காகவே இத்தகைய எதிர்ப்பு வாத அரசியல் நாடகமொன்றை மெல்லென அரங்கேற்ற ஆரம்பித்தள்ளது என்பது வெளிப்படையாகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில், வரவு செலவுத்திட்டங்களுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியது, மூன்று தடவைகளுக்கு மேலாக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்து, ஐ.தே.க அரசாங்கத்தினை காப்பாற்றியது, ஒக்டோபர் புரட்சியின் போது எவ்விதமான நிபந்தனையுமின்றி ஆட்சியமைப்பதற்கு கைகொடுத்திருந்தது, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மையுடன் இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற மக்கள் ஆணை பெற்ற கோட்பாட்டை கைவிட்டு ஒற்றை ஆட்சிக்குள் தீர்வினை தேட விளைந்தது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயம் உட்பட தாயக தமிழர்கள் முகங்கொடுக்கும் எந்தவொரு ஆக்கிரப்புக்கள், கையகப்படுத்தல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக எந்தவிதமான சனநாயகப் போராட்டங்களையோ அல்லது முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவையோ வழங்காதும் இருந்தது.

இவற்றை விடவும், ரணங்களைச் சுமக்கும் எந்தவொரு உறவுகளின் மனங்களில் உள்ள வேதனைகளையும் உணராது சர்வதேச அரங்கில் நீதிகோரலுக்காக நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையும் நீர்ப்புறச்செய்து தான் முண்டுகொடுக்கும் அரசாங்கம் மூச்சுவிட்டுச் செயற்படுவதற்காக செவ்வனே காப்பாற்றியிருந்தது கூட்டமைப்பு. இவ்வளவு தூரம் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து விட்டு எவ்வாறு தாயகத்தில் உள்ள உறவுகளிடத்தில் மீண்டும் தமக்கோ அல்லது தாம் சார்ந்த தென்னிலங்கை தரப்பினருக்கோ வாக்குகளை கோருவது. ஆகவே தான் மகிந்தவை பரம விரோதியாகவும், தாம் தற்போது சார்ந்திருக்கும் தென்னிலங்கை தரப்பினை மென்வலு விரோதியாகவும் சித்தரித்து பகிரங்க வெளியில் எதிர்ப்புக்குல் எழுப்பும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

உரிமைகளுக்காகவும், அபிலாசைகளுக்காகவும் ஏழு தசாப்தத்திற்கும் மேலாகவும் காத்திருக்கும் பாரம்பரியம் கொண்ட தன் இனத்தினையே இலகுவாக ஏமாற்றி தமது அரசியல் இருப்பினையும் சுகபோகத்தினையும் பாதுகாக்க விளையும் அரசியல் தரப்புக்களின் மாய வித்தை என்பது தாயக உறவுகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். ஆகவே இந்த எதிர்ப்புவாத அரசியல் சரசரப்புக்களுக்கு ஒருபோதும் பனங்காட்டு நரிகள் அஞ்சப்போவதுமில்லை. சோரம்போகப் போவதுமில்லை என்பது திண்ணம்.